கேரளாவின் ஐந்து நரசிம்மர் ஆலயங்கள்

கேரளாவில் உள்ள துறவூரில் உள்ள ஆலயத்தில் நரசிம்ம மூர்த்தி மற்றும் சுதர்சன மூர்த்தி இருவரும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருப்பது தனிச்சிறப்பு.

Update: 2024-06-26 11:48 GMT

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமானது, நரசிம்மர் அவதாரம். மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களிலேயே உக்கிரமானதாக கருதப்பட்டாலும், பக்தர்களால் மிகவும் விரும்பப்படும் அவதாரமாக இருப்பது நரசிம்மர் அவதாரம். பக்தனுக்காக அவதரித்த நரசிம்மருக்கு பல்வேறு இடங்களில் தனி கோவில்கள் அமைந்துள்ளன. அவ்வகையில், கேரளாவில் உள்ள ஐந்து நரசிம்மர் ஆலயங்களைப் பற்றி பார்க்கலாம்.

கோழா நரசிம்மர்

கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள குராவிலங்காட்டில் இருக்கிறது, கோழா நரசிம்ம சுவாமி கோவில். கேரளாவில் காணப்படும் மிகப் பழமையான ஆலயங்களில் இதுவும் ஒன்று. இங்கு வழிபடப்படும் முக்கிய தெய்வமான நரசிம்மர், சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலச்சேரி லட்சுமி நரசிம்மர்

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தலச்சேரியில் உள்ளது. லட்சுமி நரசிம்மர் கோவில். இங்கு மூலவராக லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். அவருக்கு இடது புறத்தில் பட்டாபி நரசிம்மரும், வீர விட்டலா சுவாமியும் உள்ளனர். கவுத் சரஸ்வத் என்ற புரோகிதர்கள் மட்டுமே இங்குள்ள இறைவனை தொட்டு பணிவிடை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இவ்வாலயத்தில் பிரம்ம ரதோற்சவம், கார்த்திகை பவுர்ணமி, நவராத்திரி போன்றவை முக்கிய திருவிழாக்களாக உள்ளன. தலச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து அருகாமையில் இந்த ஆலயம் உள்ளது.

துறவூர் நரசிம்மர்

கேரள மாநிலம் சேர்தலா நகரின் அருகில் உள்ள துறவூரில் நரசிம்ம மூர்த்தி மற்றும் மகா சுதர்சனமூர்த்தி ஆகியோர் வீற்றிருக்கும் ஆலயம் இருக்கிறது. பொதுவாக பெருமாள் கோவில்களில் சுதர்சன பெருமாள் இருக்கும் இடத்தில், அவருக்கு பின்புறத்தில் நரசிம்மர் இருப்பதை காண முடியும். ஒரே கல்லில் இந்த சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் ஒரே வளாகத்தில் அவர்கள் இருவரும் தனித்தனி சன்னிதிகளில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

ஆனையடி நரசிம்மர்

கேரள மாநிலம் கொல்லத்தில் ஆனையடி என்ற இடத்தில் இருக்கிறது, நரசிம்ம மூர்த்தி கோவில். இங்கு நரசிம்மர் மூலவராக வணங்கப்படுகிறார். ஆனையடி பூரம், நவராத்திரி, நரசிம்ம ஜெயந்தி, கிருஷ்ண ஜெயந்தி, போன்றவை இங்கு வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. நூற்றுக்கணக்கான யானைகள் அணிவகுத்து நிற்கும், ஆனையடி பூரம் திருவிழாவானது பிரமாண்டத்தின் உச்சமாகும்.

மலபரம்பா நரசிம்மர்

கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள மலபரம்பு என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த நரசிம்மர் கோவிலில் ஆடை கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆலயம் சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று சொல்கிறார்கள். பல்வேறு போர்கள், இயற்கை பேரிடர்களால் அழிந்த இந்த ஆலயம் தற்போது புனரமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்திலும் பெருமாளுக்கான அனைத்து திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறும். மலபரம்புக்கு 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அங்காடிபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து ஆட்டோவில் இவ்வாலயத்திற்கு வரலாம்.

Tags:    

மேலும் செய்திகள்