4 ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கிய பாரம்பரியம்: மீனாட்சி அம்மன் கோவிலில் வைகை புனித நீரால் அபிஷேகம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆண்டாண்டு காலமாக நடந்த வைகை புனித நீர் அபிஷேகம், கொரோனா காலகட்டத்தில் தடைபட்டது.

Update: 2024-07-01 06:50 GMT

வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்ட காட்சி

மதுரை:

மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவில் காலை 5 மணிக்கு திறந்த பிறகு 6.30 மணிக்கு காலசந்தி பூஜையும், விளா பூஜையும் நடைபெறும். இதற்காக தினமும் வைகை ஆற்றில் இருந்து புனிதநீர் (திருமஞ்சன நீர்) எடுத்து வந்து அபிஷேகம் செய்வது வழக்கம். வைகை ஆற்றில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் புனிதநீர் எடுக்கப்படும். பின்னர் அந்த நீரை பரிஜாதகர் சுமந்தும், அவர்களுக்கு முன்னால் யானை, டங்கா மாடு, நாதஸ்வரம் இசைத்தபடி கோவிலுக்கு வருவார்கள். அங்கு காலசந்தி பூஜையின் போது அம்மன் மற்றும் சுவாமியின் நந்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

இவ்வாறு ஆண்டாண்டு காலமாக நடந்த அந்த அபிஷேகம் கொரோனா காலகட்டத்தில் தடைபட்டது. அதனை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். ஆனால் காலப்போக்கில் புனித நீர் எடுக்கும் கிணற்றில் சகதி மற்றும் தேங்கியிருந்த நீரால் அசுத்தமாக காணப்பட்டது. அதனை கோவில் நிர்வாகம் சீரமைத்து சுத்தம் செய்தது. தற்போது வைகை ஆற்றில் உள்ள கிணற்றில் மீண்டும் தண்ணீர் ஊற தொடங்கியது.

அதை தொடர்ந்து மீண்டும் காலசந்தி பூஜைக்கு புனித நீரை வைகை ஆற்றில் இருந்து எடுத்து வர கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் உத்தரவிட்டார். அதன் பேரில் இன்று காலை 6 மணிக்கு புனித நீர் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வைகை ஆற்றில் சிறப்பு பூஜைகள் செய்து புனித நீர் எடுத்து வரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்