திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்
ஆழ்வார் திருமஞ்சனத்தால் 2-ந்தேதி பக்தர்களுக்கான 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.;
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி பண்டிகை, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி ஆகிய 4 விழாக்களை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடப்பது வழக்கம்.
அதன்படி அடுத்த மாதம் (ஏப்ரல்) 9-ந்தேதி யுகாதி பண்டிகை மற்றும் ஆஸ்தானம் நடக்கிறது. அதை முன்னிட்டு 2-ந்தேதி காலை 6 மணியில் இருந்து 11 மணி வரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடக்கிறது. கோவிலில் ஆனந்த நிலையத்தில் எழுந்தருளி இருக்கும் மூலவர் விக்ரகம் வெண்மையான வஸ்திரத்தால் முழுமையாக போர்த்தப்படும்.
அதன்பிறகு ஆனந்த நிலையத்தில் இருந்து தங்கவாசல் வரையிலும், இதுதவிர கோவிலில் உள்ள துணை சன்னதிகள், கோவில் வளாகம், லட்டு தயாரிக்கும் கூடம் (போட்டு), சுவர், தூண்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் போன்றவை தீய தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படுகிறது. தூய்மைப்பணி முடிந்ததும் நாமகொம்பு, ஸ்ரீசூரணம், கஸ்தூரி மஞ்சள், பச்சை கற்பூரம், சந்தனம், குங்குமம், கிச்சிலிக்கட்டை மற்றும் பிற வாசனை பொருட்கள் கலந்த புனிதநீர் கோவில் வளாகம் முழுவதும் தெளிக்கப்படுகிறது.
அதன்பிறகு மூலவர் விக்ரகம் மீது போர்த்தப்பட்டு இருக்கும் வெண்மையான வஸ்திரத்தை அகற்றி விட்டு சாஸ்திர முறைப்படி அர்ச்சகர்கள் சிறப்புப்பூஜைகள், நைவேத்தியம் சமர்ப்பித்து மதியம் 12 மணிக்கு மேல் பக்தர்களை சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கின்றனர். கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தால் 2-ந்தேதி பக்தர்களுக்கான 6 மணிநேர தரிசனம், ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.