ஆப்பிள் ஐபேடை மறதியாக ஓவனில் வைத்து சூடுபடுத்திய பெண்..! 'ஆப்பிள் கிரம்பிள்' என இணையத்தில் கிண்டல்

‘வீட்டு சாவியை மறந்து வாசலிலேயே விட்டுவிட்டேனே என்று சொல்வதைவிட இது சற்று தீவிரமானது’ என சமூக வலைத்தள பயனர் ஒருவர் கருத்து பதிவிட்டுள்ளார்.

Update: 2024-02-24 11:09 GMT

சமையல் அறையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பெரியவர்கள் அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள். இருந்தாலும் பலர் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல், செல்போன் பேசிக்கொண்டே சமைப்பது, பாடல் கேட்டுக்கொண்டே சமைப்பது, டி.வி. சீரியலை கவனித்துக்கொண்டே சமைப்பது என தங்கள் இஷ்டத்திற்கு செய்வார்கள். இவ்வாறு செய்யும்போது சில சமயம் உணவை சொதப்பிவிடுவார்கள். சில சமயம் விபத்துக்கும் வழிவகுத்துவிடுகிறது.

அவ்வகையில், ஒரு பெண் கவனக்குறைவாக தனது ஆப்பிள் ஐபேடை, மைக்ரோவேவ் ஓவனில் (மின்சார அடுப்பு) வைத்து சூடுபடுத்தியிருக்கிறார். இதனால் அந்த ஐபேட் மீண்டும் சரி செய்ய முடியாத அளவிற்கு சேதமடைந்துவிட்டது. உடைந்த ஐபேட் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரெடிட் தளத்தில் பகிரப்பட்ட ஒரிஜினல் பதிவில், "எனது அம்மா, தற்செயலாக அவரது ஐபேடை ஓவனில் வைத்து சூடுபடுத்திவிட்டார் " என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதிவு சுமார் 40 ஆயிரம் ஆதரவு வாக்குகளைப் பெற்றுள்ளது.

புகைப்படத்தை பார்த்த சமூக வலைத்தள பயனர்கள் கேலியும் கிண்டலுமாக கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சிலர் ஆச்சரியம் தெரிவித்துள்ளனர். அவர் அந்த ஆப்பிள் மூலம் 'ஆப்பிள் கிரம்பிள்' செய்திருக்கிறார் என ஒரு பயனர் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.

அந்த பெண்ணின் நிலை சரியில்லை அவர் நல்ல டாக்டரை பார்த்து ஆலோசனை பெறலாம். அச்சச்சோ வீட்டு சாவியை மறந்து வாசலிலேயே விட்டுவிட்டேனே.. என்று சொல்வதைவிட இது சற்று தீவிரமானது, என ஒருவர் கூறியிருந்தார்.

அந்த ஓவனில் ரசாயன கசிவு ஏற்படாமல் இருக்க, ஓவனை நன்றாக சுத்தம் செய்யவேண்டும். அதுவரை அந்த ஓவனை பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம் என மற்றொரு பயனர் அறிவுறுத்தியிருந்தார். அதெப்படி செய்ய முடிகிறது? ஓவனை தொட்டில் என்று நினைத்து தற்செயலாக தன் குழந்தையை அடுப்பில் வைத்த ஒரு பெண்ணின் நினைவு தனக்கு வருவதாக ஒரு பயனர் தெரிவித்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்