இந்தியா-கனடா விவகாரத்தில் யாரை நண்பராக தேர்ந்தெடுப்பீர்கள்...? முன்னாள் பென்டகன் அதிகாரி பதில்

நிஜ்ஜார் விவகாரத்தில் இந்தியாவுடனான கனடாவின் மோதல் யானைக்கு எதிராக எறும்பு போர் தொடுப்பது போலாகும் என பென்டகன் முன்னாள் அதிகாரி பதில் அளித்துள்ளார்.

Update: 2023-09-23 04:55 GMT

நியூயார்க்,

கனடாவில் சீக்கிய குருத்வாராவின் தலைவரான, இந்தியாவால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா மற்றும் கனடாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

இதனால், இரு நாடுகளும் அந்தந்த நாடுகளின் தூதர்களை வெளியேறும்படி உத்தரவிட்டது பரபரப்பு ஏற்படுத்தியது. கே.டி.எப். என்ற காலிஸ்தான் புலி படையின் தலைவராக செயல்பட்ட நிஜ்ஜார், கடந்த ஜூன் மாதத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இந்தியாவின் மீது கனடா பிரதமர் ட்ரூடோ குற்றச்சாட்டு கூறியதன் தொடர்ச்சியாக, இந்திய தூதர் அந்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

இந்த தடை செய்யப்பட்ட கே.டி.எப். அமைப்புக்கு ஆள் சேர்ப்பது, பயிற்சி வழங்குவது போன்றவற்றில் அவர் ஈடுபட்டார். நிஜ்ஜாருக்கு பயங்கரவாத நடவடிக்கைகளில் உள்ள தொடர்பு பற்றி, இந்தியா பல ஆண்டுகளாக, பல்வேறு முறை கனடாவை தொடர்பு கொண்டு அதுபற்றிய விவரங்களை பகிர்ந்து வந்துள்ளது.

2018-ம் ஆண்டில் ட்ரூடோவுக்கு, இந்தியா அனுப்பிய தேடப்படும் நபர்களின் பட்டியலில் நிஜ்ஜார் பெயர் இடம் பெற்றது. இதன்பின் 2022-ம் ஆண்டு, பஞ்சாப்பில் பயங்கரவாத பரவலுடன் தொடர்புடைய வழக்குகளில் அவரை நாடு கடத்தி ஒப்படைக்கும்படி பஞ்சாப் போலீசார் கேட்டு கொண்டனர்.

இதுபோன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மற்றும் வழக்குகளுக்கு பின்னர், 2020-ம் ஆண்டு அவரை பயங்கரவாதியாக இந்தியா அறிவித்தது. பஞ்சாப்பின் ஜலந்தரில், இந்து சாமியார் ஒருவரை கொல்ல சதி திட்டம் தீட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், 2022-ம் ஆண்டில் அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.10 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நிஜ்ஜார் படுகொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறும்போது, இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கும், கனடா குடிமகனின் படுகொலைக்கும் இடையே உள்ள தொடர்பு பற்றி கனடா பாதுகாப்பு முகமைகள் தொடர்ந்து விசாரித்து வருகின்றன என கூறினார்.

கனடாவில் குடிமகன் ஒருவர் படுகொலையில் அந்நியர் ஒருவரின் அல்லது வெளிநாட்டு அரசின் தொடர்பு இருப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என்று அவர் அழுத்தி கூறினார். இதனால், சில இந்தோ-கனடியர்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் அச்சத்திலும் உள்ளனர் என்றும் கூறினார்.

இந்த விவகாரத்தில், உண்மை விவரங்கள் தெரிய, கனடாவுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அவரது இந்த பேச்சால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. எனினும், ட்ரூடோவின் இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா மறுத்தது.

இந்த நிலையில், கனடாவுக்கான இந்திய தூதர் ஒருவரை வெளியேற்றி கனடா அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதனை, கனடா நாட்டு வெளியுறவு மந்திரி மெலனி ஜாலி உறுதிப்படுத்தினார். எனினும், இந்திய தூதருடைய பெயர் உள்ளிட்ட பிற விவரங்களை வெளியிடவில்லை.

இதற்கு பதிலடியாக, இந்தியாவுக்கான கனடா தூதர் கேமரூன் மெக்கேவை இந்தியாவில் இருந்து வெளியேறும்படி மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. இதன்படி, 5 நாட்களுக்குள் அவர் இந்தியாவை விட்டு வெளியேறும்படி கேட்டு கொண்டது.

இந்நிலையில், கனடாவின் வின்னிபக் என்ற பகுதியில் 2 கும்பல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் சுக்தூல் சிங் என்ற மற்றொரு காலிஸ்தான் பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டது பரபரப்பை அதிகப்படுத்தியது.

அடுத்தடுத்து கனடா நாட்டுடனான உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், விசா வழங்கும் சேவையை இந்தியா நிறுத்தியது. இதனால், இரு நாடுகளுக்கு இடையே பதற்ற நிலை அதிகரித்து உள்ளது. இந்த சூழலில், அமெரிக்காவின் ராணுவ தலைமையகம் அமைந்துள்ள பென்டகனின் முன்னாள் அதிகாரியான மைக்கேல் ருபின் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பதிலில், கனடாவை விட இந்தியா அதிக முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியாவுடன் கனடா மேற்கொண்டுள்ள மோதலானது, யானைக்கு எதிராக எறும்பு போர் தொடுப்பது போலாகும் என கூறியுள்ளார். கனடா பிரதமர் ட்ரூடோவுக்கு குறைவான ஆதரவே காணப்படுகிறது என சுட்டி காட்டிய ருபின், பிரதமர் பதவியில் இருந்து ட்ரூடோ விலகிய பின்பு, கனடாவுடனான நட்புறவை அமெரிக்கா மீண்டும் கட்டியமைக்கும் என கூறினார்.

இரு நண்பர்களுக்கு இடையே ஒருவரை தேர்ந்தெடுப்பதில், ஓரங்கட்டப்பட்டது போன்று காட்சிப்படுத்தப்பட அமெரிக்கா விரும்பாது என்றே நினைக்கிறேன். ஆனால், இரு நண்பர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், இந்த விவகாரத்தில் நாங்கள் இந்தியாவை தேர்ந்தெடுக்க இருக்கிறோம்.

ஏனெனில் நிஜ்ஜார் ஒரு பயங்கரவாதி. இதுதவிர, இந்தியாவும் கூட முக்கியம் என்று கூறினார். எங்களுடைய நட்புறவு கூட மிக முக்கியம் வாய்ந்தது என்று கூறினார். இந்தியாவை விட கனடாவுக்கே பெரிய ஆபத்து உள்ளது. இந்தியா, உலகின் மிக பெரிய ஜனநாயக நாடாக உள்ளது என்பதே உண்மையாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்