வான்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக சலீம் ராம்ஜி நியமனம்

நிதி சேவை அதிகாரியாக நீண்டகால அனுபவம் கொண்ட சலீம் ராம்ஜி, வான்கார்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Update: 2024-05-17 08:29 GMT

உலகின் முன்னணி முதலீட்டு மேலாண்மை நிறுவனங்களில் ஒன்றான வான்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.). சலீம் ராம்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். நிதி சேவை அதிகாரியாக நீண்டகால அனுபவம் கொண்ட சலீம் ராம்ஜியை வான்கார்ட் சி.ஓ.ஓ. மட்டுமின்றி நிறுவனத்தின் இயக்குனர் குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், ஜூலை 8-ம் தேதி அவர் பதவியேற்பார் என்றும் வான்கார்ட் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வான்கார்ட் நிறுவனத்தின் தற்போதைய சி.இ.ஓ. டிம் பக்லே, ஏற்கனவே அறிவித்தபடி நிறுவனத்தின் தலைவர் மற்றும் சி.இ.ஓ. ஆகிய பொறுப்புகளில் இருந்து விலகுவார்.

மூத்த நிதிச் சேவை நிர்வாகியான ராம்ஜி, முதலீடுகள், மூலதனச் சந்தைகள் மற்றும் செல்வ மேலாண்மை ஆகிய துறைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். பிளாக்ராக் நிறுவனத்தில் 10 ஆண்டு காலம் மூத்த தலைவராக பணியாற்றிய அவர், கடந்த ஜனவரி மாதம் வெளியேறினார். அந்த நிறுவனத்தில், வாக்களிக்கும் தேர்வு தளத்தை செயல்படுத்தும் குழுவின் தலைவராக இருந்தார்.

சமீபத்தில் ஐஷேர்ஸ் மற்றும் இண்டெக்ஸ் இன்வெஸ்ட்டிங் நிறுவனத்தின் உலகளாவிய தலைவராக ராம்ஜி பணியாற்றினார். அங்கு நிறுவனத்தின் பெரும்பாலான வாடிக்கையாளர் முதலீடுகளை நிர்வகித்தல், ஐஷேர்ஸ் தளத்தை உருவாக்குதல் ஆகிய பணிகளில் தலைமை பொறுப்பில் இருந்தார். மேலும் உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு பரந்த அளவிலான புதுமையான குறைந்த விலை தயாரிப்புகளை வழங்குவதிலும் முக்கிய பங்காற்றினார். 

வான்கார்ட் குழுமம் 1975-ல் நிறுவப்பட்டது. அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள மால்வென் நகரை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு முதலீடுகள், ஆலோசனைகள் மற்றும் ஓய்வூதிய சேவைகளை வழங்குகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு சுமார் 7.7 டிரில்லியன் டாலர் ஆகும்.

Tags:    

மேலும் செய்திகள்