நான் செய்த ஒரே குற்றம், நம் நாட்டை அழிப்பவர்களிடம் இருந்து பாதுகாத்தது தான் - டிரம்ப் பேட்டி

அமெரிக்க வரலாற்றில், இருள் சூழ்ந்த பக்கத்தில் இருக்கிறோம் என அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கூறினார்.

Update: 2023-04-05 04:52 GMT

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது. அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலிக்கவே செய்தது.

அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஸ்டோர்மி டேனியல்ஸை பேச விடாமல் இருக்க 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த தொகை டிரம்பின் தேர்தல் வரவு-செலவு கணக்கில் சட்டரீதியிலானதாக பதிவு செய்யப்பட்டிருப்பதாக கிரிமினல் வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்பிற்கு எதிரான ஆவணங்கள் உறுதியாக உள்ளதாகவும், அவர் விரைவில் கைது செய்யப்படுவார் எனவும் தகவல்கள் வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் விரைவில் சரண்டர் ஆக உள்ளதாக தகவல் வெளியானது. டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் (டிஏ) அலுவலகத்தில் சரணடைவார் என்று அவரது வழக்கறிஞர் ஜோ டகோபினா தெரிவித்தார். இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில், தனக்கு சொந்தமான டிரம்ப் டவரில் தங்கிய இவர் பலத்த பாதுகாப்புக்கு நடுவே மன்ஹாட்டன் நீதிமன்றம் சென்றார். அங்கு விசாரணைக்கு முன்பாக போலீசாரின் காவலுக்கு கொண்டு வரப்பட்டார்.

பின் நீதிபதி அல்வின் பிராக்கு முன்னிலையில் நேற்றிரவு இந்திய நேரப்படி 11:00 மணியளவில் அவர் ஆஜரானார். அடர் நீல நிறத்தில் கோட்டும் சிவப்பு நிற டையும் அணிந்து வந்த டிரம்ப் பதற்றமாக காணப்பட்டார். நீதிமன்ற விதிகளின்படி முன்னதாக டிரம்பின் கைரேகையை பதிவு செய்த நீதிமன்ற ஊழியர்கள் அவரை புகைப்படம் எடுத்தனர். வழக்கு விசாரணையின் போது டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டன. பின் இவை தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது.

அப்போது டிரம்ப் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து கூறியதாவது:

ஆபாச பட நடிகைக்கு நான் பணம் ஏதும் கொடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் தான் எந்தவொரு தவறும் இழைக்கவில்லை எனக்கூறினார்.

இதனை நீதிபதி பதிவு செய்து கொண்டார். தொடர்ந்து, எந்த கட்டுப்பாடுகளும் விதிக்காமல், டிரம்ப்பை அங்கிருந்து செல்லுமாறு அனுமதி வழங்கினார். இதன் பின்னர், டிரம்ப்பும் புறப்பட்டு சென்றார்.

அதனை தொடர்ந்து புளோரிடாவில் உள்ள தனது வீட்டின் முன்பு கூடியிருந்த ஆதரவாளர்கள்

மத்தியில் டிரம்ப் பேசியதாவது:

அமெரிக்காவில் இப்படி நடக்கும் என்று நான் நினைத்து கூட பார்த்தது இல்லை. ஒரு போதும் நினைத்தது இல்லை. நான் செய்த ஒரே தவறு என்னவென்றால், 'அமெரிக்காவை அழிக்க நினைத்தவர்களிடம் இருந்து, பயமின்றி நாட்டை

காத்தது தான்'. அமெரிக்க வரலாற்றில், இருள் சூழ்ந்த பக்கத்தில் இருக்கிறோம். ஆனால், நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். நாடு நரகத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன் என்று என்னால் கூற முடியும். நான் செய்த ஒரே குற்றம், நம் நாட்டை அழிக்க முற்படுபவர்களிடமிருந்து அச்சமின்றி பாதுகாப்பதுதான்.

நமது எல்லைகளை திறந்து விட்டதை பார்த்தும், ஆப்கானிஸ்தானில் இருந்து படைகள் திரும்ப பெறப்பட்டதை பார்த்தும் உலக நாடுகள் அமெரிக்காவை பார்த்து சிரிக்கின்றன.

இவ்வாறு டிரம்ப் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்