ஈராக் போர் நியாயமற்றது... ஜார்ஜ் புஷ்சின் பேச்சு ஏற்படுத்திய சர்ச்சை

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரை, ஈராக் போர் என உளறிய முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சின் பேச்சு வைரலாகி வருகிறது.

Update: 2022-05-19 13:37 GMT


வாஷிங்டன்,

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (வயது 75). 2 முறை அதிபர் பதவியை அலங்கரித்த அவர் 2001ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை ஆட்சி பீடத்தில் அமர்ந்தவர்.

அவரது ஆட்சி காலத்தில் மேற்கு ஆசியாவில் பேரழிவை ஏற்படுத்த கூடிய ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, 2003ம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.

இதில், 2.5 லட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர் என ஈராக்கிய உயிரிழப்பு பற்றிய கணக்கீடு தெரிவிக்கிறது. அவர்களில் 5 ஆயிரம் அமெரிக்க படை வீரர்களும் அடங்குவார்கள்.

எனினும், இதுவரை பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. போரை முன்னிட்டு நாட்டை விட்டு பலர் புலம்பெயர்ந்தனர்.

ஈராக் போரை தலைமையேற்று நடத்திய ஜார்ஜ் புஷ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரில் உள்ள ஜார்ஜ் டபிள்யூ புஷ் மையத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.

குடியரசு கட்சியை சேர்ந்தவரான புஷ் பேசும்போது தவறுதலாக கூறுவது பரவலாக அறியப்படும் விசயம். அதனால் பார்வையாளர்கள் வரிசையில் இருப்பவர்கள் குழம்பி போய் விடுவர். இந்த நிலையில், உக்ரைனில் போர் மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர் புதினை குறிப்பிடும் நோக்கில் புஷ் பேசினார்.

அவர் கூறும்போது, ரஷியாவில் தேர்தல்களில் முறைகேடுகள் நடக்கின்றன. அரசியல் எதிரிகள் சிறை வைக்கப்படுகின்றனர். அல்லது தேர்தல் நடைமுறையில் இருந்தே ஓரங்கட்டப்படுகின்றனர் என கூறினார்.

இதன் விளைவால் தனிமனிதர் ஒருவருக்கு அதிகாரம் வரப்பெற்று, முழுவதும் நியாயமற்ற மற்றும் கொடூர படையெடுப்பு ஈராக் மீது நிகழ்த்தப்படுகிறது என்று கூறினார். இதனால், பார்வையாளர்கள் மத்தியில் அமைதி நிலவியது.

இதனை தொடர்ந்து தனது தவறை திருத்தி கொண்டு, தலையை ஆட்டி கொண்டு, நான் உக்ரைனை கூறினேன் என புஷ் பேசினார். வயது முதிர்வால் தனது பேச்சு தவறாகி விட்டது என அவர் கூறியதும் பார்வையாளர்கள் வரிசையில் இருந்தவர்கள் மத்தியில் சிரிப்பொலி பரவியது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதனை டல்லாஸ் செய்தி நிருபர் ஒருவர் டுவிட்டரில் வெளியிட்டதும் அதனை 30 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் உடன் ஒப்பிட்டும் புஷ் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்