காசா நகருக்கு ஸ்டார் லிங்க் இணையதள சேவை; எலான் மஸ்க் முடிவு

காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்களுக்கு இணையதள சேவையை வழங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.

Update: 2023-10-28 14:27 GMT

டெல் அவிவ்,

இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த 7-ந்தேதி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பின்னர் அந்நாட்டு எல்லைக்குள் அதிரடியாக புகுந்தது. இசை திருவிழாவில் கலந்து கொண்டவர்கள் உள்பட எல்லை பகுதியில் தங்கியிருந்தவர்களை கடுமையாக தாக்கி வன்முறையில் ஈடுபட்டது.

இந்த சம்பவத்தில், 260 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். அந்த அமைப்பு 210 பேரை பணய கைதிகளாக சிறை பிடித்து சென்றது. இதனை தொடர்ந்து, இஸ்ரேல் அரசும் இதற்கு பதிலடி கொடுத்து வருகிறது. 22-வது நாளாக இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையேயான மோதல் இன்றும் தொடர்ந்து வருகிறது.

இஸ்ரேல் தாக்குதலை அடுத்து காசாவின் தொலைதொடர்பு கேபிள் துண்டிக்கப்பட்டு இருந்தது. இதனால், இணையதள சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், காசா நகருக்கு செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை ஸ்டார் லிங்க் வழங்க இருக்கிறது. எலான் மஸ்க் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரின்போது, இதேபோன்று இணையதள சேவையை மஸ்க் வழங்கினார். இதன்படி, காசாவில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச உதவி குழுக்களுக்கு இணையதள சேவையை வழங்க மஸ்க் முடிவு செய்திருக்கிறார்.

அமெரிக்காவின் பிரதிநிதியான அலெக்சாண்டிரியா ஆகேசியோ-கார்டெஜ் என்பவர் அறிக்கை ஒன்றில், 22 லட்சம் பேருக்கு அனைத்து வித தொலைதொடர்புகளையும் துண்டிப்பது என்பது ஏற்று கொள்ள முடியாதது என கூறினார்.

அவர் தனது பதிவில், பத்திரிகையாளர்கள், மருத்துவ அதிகாரிகள், மனிதநேய முயற்சிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் பேராபத்தில் உள்ளனர். இதனை அமெரிக்கா கண்டிக்கிறது என தெரிவித்து உள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மஸ்க் தன்னுடைய எக்ஸ் சமூக பதிவில், காசாவுக்கான ஸ்டார்லிங்க் இணையதள சேவையை வழங்கும் முடிவை வெளியிட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்