கார்கிவ் நகரில் ரஷிய படைகள் தாக்குதல் - 3 பேர் உயிரிழப்பு, 10 பேர் படுகாயம்
கார்கிவ் நகரின் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.;
கீவ்,
உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதலை தொடங்கியது. தற்போது வரை தொடர்ந்து வரும் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்த போரால் உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இரு தரப்பிலும் மிகப்பெரிய் அளவில் உயிர்சேதமும் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் ரஷிய ராணுவம், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளை கைப்பற்றி வருகிறது. தற்போது கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனிய பகுதிகளில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. அங்குள்ள கார்கிவ் நகரில் கடந்த திங்கள்கிழமை நடந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார், மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று மீண்டும் கார்கிவ் நகரின் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகள் மற்றும் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாகவும், 10 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷிய படைகளின் தாக்குதலால் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் தீ பரவத் தொடங்கியது. இந்த தாக்குதல்களுக்கு உக்ரைனிய படைகள் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகின்றன.