உக்ரைன் வீரர்களை வேகுவம் குண்டுகளை வீசி கொன்ற ரஷியா; அதிர்ச்சி தகவல்

சுவர்கள் அல்லது குகைகள் கூட இந்த தாக்குதலில் இருந்து தப்பிக்கவோ, பாதுகாப்பு அளிக்கவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-03-16 14:10 GMT

மாஸ்கோ,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையேயான போரானது 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. இதில், உக்ரைனை நிலம், நீர் உள்ளிட்ட பகுதிகளில் சூழ்ந்து கொண்டு ரஷியா போர் தொடுத்து வருகிறது. இதற்காக ராணுவ செலவினங்களும் அதிகரித்து வருகின்றன. எனினும், இரு நாடுகளும் போரை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், ரஷிய ராணுவம் வெளியிட்டு உள்ள செய்தியில், வேகுவம் வகை குண்டுகளை வீசி எண்ணற்ற வீரர்களை கொன்றுள்ளோம் என இன்று தெரிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்த வகை குண்டுகள் சுற்றுப்புறத்தில் உள்ள பிராணவாயுவை ஈர்த்து, அதன் தொடர்ச்சியாக ஒரு குண்டுவெடிப்பை ஏற்படுத்தும்.

ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்கை சொய்கு உடனான சந்திப்பின்போது, ரஷிய ராணுவ படைகளின் துணை தலைவர் கூறும்போது, 300 வீரர்கள் வரை போரில் இந்த வகை குண்டுகள் வீசி கொல்லப்பட்டு உள்ளனர். வான்வழியே நடத்தப்பட்ட துல்லிய தாக்குதலை அடுத்து, அவர்கள் உயிரிழந்தனர் என கூறியுள்ளார் என்று தெரிவித்து உள்ளது.

இதனை ரஷியாவின் கர்னல் ஜெனரல் அலெக்சி கிம்மும் குறிப்பிட்டு உள்ளார். எனினும், எந்த இடத்தில் இந்த தாக்குதல் நடந்தது என குறிப்பிடவில்லை. இந்த வகை குண்டுவெடிப்பானது, கட்டிடங்களை சேதப்படுத்தவும் மற்றும் உடல் உறுப்புகளை பாதிக்க செய்யவும் திறன் பெற்றவை. சுவர்கள் அல்லது குகைகள் கூட இதில் இருந்து தப்பிக்கவோ, பாதுகாப்பு அளிக்கவோ முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தாக்குதலால், கடந்த ஒரு வாரத்தில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 10 பீரங்கிகள், எரிபொருள் மற்றும் வெடிபொருள் கிடங்குகள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டன என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்தது. இதனால், உக்ரைனானது வீரர்கள் மற்றும் கருவிகள் என்றளவில் பெரிய இழப்புகளை சந்தித்துள்ளது என்றும் தெரிவித்து உள்ளது. எனினும், இந்த தகவலை பற்றி உக்ரைன் அரசு எதுவும் தெரிவிக்கவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்