கடலில் குதித்து வானிலை செய்தி வழங்கிய செய்தியாளர் - வைரல் வீடியோ
பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் ஒருவர் கடலில் குதித்து ஆழத்தை அளந்து செய்தி வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது;
கராச்சி,
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை, வலுவடைந்து புயலாக உருமாறியது. 'பிபர்ஜாய்' என பெயரிடப்பட்ட இந்த புயல் வடக்கு நோக்கி நகர்ந்து கடந்த 11-ந்தேதி அதிதீவிர புயலாக வலுவடைந்தது. குஜராத் கடற்பகுதியை நோக்கி நகர்ந்து வரும் இந்த அதிதீவிர புயலானது குஜராத்தின் கட்ச் மாவட்டம் மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே குஜராத்தின் ஜகாவு துறைமுகம் அருகே இன்று (வியாழக்கிழமை) மாலையில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மிகவும் அதிதீவிர புயலாக உருவாகியுள்ள இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளரின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் 'பிபர்ஜாய்' புயல் குறித்து பேசும் அந்த நபர் கடலின் ஆழம் குறித்தும் பேசுகிறார். அப்போது சற்றும் எதிர்பாரா விதமாக அவர் கடலில் குதித்துள்ளார். கடலில் விழுந்தும் அவர் தனது மைக்கை விடாமல் கடலின் ஆழம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறார்.
இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த சிலர் இவர் தான் வானிலை செய்திகளை வழங்கும் செய்தியாளர்களில் சிறந்தவர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.