ராமர் கோவில் கும்பாபிஷேக விழா; அமெரிக்காவில் 350 கார்களில் இந்தியர்கள் பேரணி

பேரணி தொடங்குவதற்கு முன்பு, கடவுள் ராமர் ஆராதனை பாடல்களும் பாடப்பட்டன. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2024-01-13 23:01 GMT

நியூ ஜெர்சி,

உத்தர பிரதேசத்தின் அயோத்தி நகரில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. அதற்கான கும்பாபிஷேக விழா வருகிற 22-ந்தேதி நடைபெற உள்ளது. ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் நாளைக்குள் நிறைவடைந்து விடும். அதன்பின் 16-ந்தேதி (நாளை மறுநாள்) சிலை பிரதிஷ்டை பூஜை தொடங்கி, தொடர்ந்து 22-ந்தேதி வரை நடைபெறும்.

ராமர் கோவில் வளாகம் பாரம்பரிய நகர முறைப்படி கட்டப்பட்டு உள்ளது. அது கிழக்கு மேற்கு திசையில் 380 அடி நீளமும், 250 அடி அகலமும் மற்றும் 161 அடி உயரமும் கொண்டது. கோவிலின் ஒவ்வொரு தரைப்பகுதியும் 20 அடி உயரம் கொண்டது. மொத்தம் 392 தூண்கள் மற்றும் 44 நுழைவாயில்களையும் கோவில் கொண்டுள்ளது.

இதேபோன்று தங்க முலாம் பூசப்பட்ட கதவுகளும் நிறுவப்படுகின்றன. இந்த கதவு 12 அடி உயரமும், 8 அடி அகலமும் உடையது. கோவிலில் மொத்தம் 46 கதவுகள் நிறுவப்படும். அவற்றில் 42 கதவுகளில் 100 கிலோ எடை கொண்ட தங்க முலாம் பூசப்படும்.

இந்த விழாவில் பங்கேற்க வரும்படி, புத்த மத தலைவர் தலாய் லாமா, கேரளாவின் மாதா அமிர்தானந்தமயி, யோகா குரு பாபா ராம்தேவ், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், அருண் கோவில், நடிகை மாதுரி தீட்சித், திரை இயக்குநர் மதுர் பண்டார்கர், முன்னணி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, அனில் அம்பானி, பிரபல ஓவியர் வசுதேவ காமத், இஸ்ரோ இயக்குநர் நிலேஷ் தேசாய் மற்றும் பிற பிரபலங்களுக்கும் அழைப்பு விடப்பட்டு உள்ளது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் எடிசன் பகுதியில் உள்ள இந்தியர்கள், கார் பேரணி ஒன்றை நடத்தினர். இதற்காக 350-க்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக அணிவகுத்தன. அந்த கார்களில் இந்து சமயம் சார்ந்த கொடிகள் கட்டப்பட்டு இருந்தன. பேரணி தொடங்குவதற்கு முன்பு, கடவுள் ராமர் ஆராதனை பாடல்களும் பாடப்பட்டன. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்