அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா: முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும் 'மஹாபிரசாதம்'
விழாவில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு, கோவில் வளாகத்தில் உணவு ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்துள்ளது.
அயோத்தி,
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் (இன்று) நடக்கிறது. இந்த விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த நிலையில், விழாவில் கலந்துகொள்ள வரும் முக்கிய பிரமுகர்களுக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை சார்பில் 'மஹாபிரசாதம்' வழங்கப்படுகிறது. இதற்காக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரசாத பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் நெய், 5 வகையான உலர் பழங்கள், சர்க்கரை, உளுந்து மாவு ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்ட 2 லட்டுகள், சரயு நதி நீர், அட்சதை, வெற்றிலை தட்டு உள்ளிட்டவை இருக்கும்.
அந்த பாக்கெட்டுகள் அனைத்தும் அறக்கட்டளையிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. விழாவிற்கு பிறகு முக்கிய பிரமுகர்களுக்கு அவை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தவிர நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு, கோவில் வளாகத்தில் உணவு ஏற்பாடுகளை அறக்கட்டளை செய்துள்ளது. விருந்தினர்களுக்கு பருப்பு வகைகள் மற்றும் தினை சார்ந்த உணவுகளுடன் சுத்தமான சைவ உணவு வழங்கப்படும். இந்த உணவுகளை வாரணாசி மற்றும் டெல்லியைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் தயார் செய்வார்கள். இது தவிர சில இனிப்பு பதார்த்தங்களும் விருந்தினர்களுக்கு வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.