ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் பிறந்த குழந்தைகளுக்கு ராம், சீதா என பெயர் சூட்டி மகிழ்ந்த பெற்றோர்கள்
பல்வேறு மாநிலங்களில் நேற்றைய தினம் பிறந்த குழந்தைகளுக்கு ராமர் மற்றும் சீதா என்று பெயரிட்டு பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புவனேஷ்வர்,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் நேற்று பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது . கோவிலின் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பல முக்கிய தலைவர்கள், திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ராமர் கோவில் பிரதிஷ்டை நாளான நேற்று நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ராமர் மற்றும் சீதா என்று பெயரிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மற்றும் ஜகத்சிங்பூர் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நேற்று ஆறு குழந்தைகள் பிறந்தன. பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் ராமர் மற்றும் சீதாவின் பெயரை சூட்டியுள்ளனர்.
ஒடிசாவில் பிறந்த குழந்தைக்கு 21 நாள் பூஜைக்குப் பிறகே பெயர் வைப்பது பாரம்பரியம் மற்றும் வழக்கம் என்றாலும், நேற்றைய தினம் நடைபெற்ற ராமர் சிலை பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்து, பிறந்த குழந்தைகளுக்கு ராமர், சீதா என்று பெயரிட்டனர்.
"சனாதன தர்மத்தை கடைபிடிப்பவர்கள் அனைவருக்கும் இது ஒரு முக்கியமான நாள். எங்கள் குடும்பத்திற்கு புதிய வருகையால் எங்களுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி" என்று பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிரியங்கா மல்லிக் கூறினார். அயோத்தியில் ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை விழா முடிந்த சிறிது நேரத்திலேயே கேந்திரபாரா மாவட்ட தலைமையகத்தில் மதியம் 1 மணியளவில் அவருக்கு குழந்தை பிறந்தது. "சகாப்தத்தை நினைவுகூரும் வகையில் எங்கள் மகளுக்கு சீதை என்று பெயரிட முடிவு செய்துள்ளோம்" என்று பிறந்த குழந்தையின் தந்தை நாராயணன் கூறினார்.
கேந்திரபாரா நகரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் ரேணுபாலா ரவுத் என்பவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்தது. இது குறித்து ரேணுபாலாவின் கணவர் அஜய் கூறியதாவது, "ராமர் கோவில் சிலை பிரதிஷ்டை தினத்தன்று நான் ஆண் குழந்தைக்கு தந்தையாகிவிட்டேன். அவர் பிறந்த நன்னாளில் குழந்தை பிறந்தது எங்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. எங்கள் மகனுக்கு ராம் என்று பெயர் வைக்க முடிவு செய்திருக்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.