நீதிபதியை மிரட்டியதாக வழக்கு: நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரிய இம்ரான் கான்

இம்ரான் கான் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Update: 2022-09-30 10:13 GMT

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் உதவியாளர் ஷாபாஸ் கில், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய இம்ரான்கான், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தனது அரசியல் எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார்.

மேலும், காவல்துறை வேண்டுகோளின்படி, கில்லை இரண்டு நாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கியதற்காக பெண் நீதிபதி ஜெபா சவுத்ரி மீது நடவடிக்கை எடுக்க உள்ளதால் அவர் தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இம்ரான்கான் தமது பேச்சின்போது குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து அவர் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இம்ரான் கான் கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் தமது வழக்கறிஞருடன் நேரில் ஆஜராகி  பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார். இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இம்ரான் கான் வருகையால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்