பாகிஸ்தான்: ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற செனட் சபையில் தீர்மானம்

பாகிஸ்தான் ஜனாதிபதி மீது அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபையில் ஆளுங்கட்சி, பதவி நீக்க தீர்மானம் தாக்கல் செய்துள்ளது.

Update: 2022-07-16 03:51 GMT

Image Courtacy: AFP

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல் களத்தில் குதித்து பாகிஸ்தான் தெக்ரீக் இ இன்சாப் என்ற கட்சியைத் தொடங்கி பிரதமர் பதவியைப் பிடித்தவர் இம்ரான்கான்.

ஆனால் அவருடைய அரசுக்கு எதிராக கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் வரிந்துகொண்டு, போர்க்கொடி உயர்த்தின. நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. ஆளும் கட்சியை விட எதிர்க்கட்சிகளுக்கு கூடுதல் எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு நடத்தினால் ஆட்சி கவிழ்ந்து விடும் நிலை உருவானது.

ஆனால் அதன்மீது கடந்த ஏப்ரல் 3-ந் தேதி ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய துணை சபாநாயகர், நம்பிக்கையில்லா தீர்மானம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என கூறி நிராகரித்தார்.

அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி ஆரிப் ஆல்வி உத்தரவிட்டார். இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டை நாடின. சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவின்படி நம்பிக்கையில்லா தீர்மானம் மீது நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தம்பி ஷபாஸ் ஷெரீப் பிரதமர் ஆனார்.

இந்த நிலையில் இம்ரான்கான் அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்தது, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது தொடர்பான வழக்கை விசாரித்து சுப்ரீம் கோர்ட்டு நேற்று முன்தினம் இறுதி தீர்ப்பு அளித்தது

தீர்ப்பில், இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிராகரித்ததில் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, இம்ரான்கான் மற்றும் அன்றைய ஆளும் கட்சி தலைவர்கள் அதிகாரம் செலுத்தும் புனித நம்பிக்கையை மீறியதாக கூறியது.

அதுமட்டுமின்றி அரசியல் சாசனம் பிரிவு 6-ன்கீழ், ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, இம்ரான்கான், முன்னாள் சபாநாயகர் ஆசாத் கைசர், முன்னாள் துணை சபாநாயகர் காசிம் சூரி, முன்னாள் சட்ட மந்திரி பவாத் சவுத்ரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியது.

இந்த தீர்ப்பு இம்ரான்கானுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பதவி நீக்க தீர்மானம்

இந்த நிலையில் ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ் ஷெரீப்) கட்சி எம்.பி. டாக்டர் அப்னனுல்லா கான், நாடாளுமன்ற செனட் சபையில் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி மீது பதவி நீக்க தீர்மானத்தை தாக்கல் செய்துள்ளார்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து இந்த நடவடிக்கையை அவர் மேற்கொண்டுள்ளார்.

இந்த தீர்மானத்தில் ஜனாதிபதி ஆரிப் ஆல்வி, முன்னாள் பிரதமர் இம்ரான்கான், முன்னாள் சட்ட மந்திரி பவாத் சவுத்ரி, காசிம் சூரி ஆகியோர் மீது அரசியல் சாசன சட்டம் பிரிவு 6-ன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்