எகிப்தில் போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை..!

எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

Update: 2023-06-25 08:37 GMT

கெய்ரோ,

பிரதமர் மோடி அமெரிக்க நாட்டுக்கு கடந்த 21-ந் தேதி முதல் அரசுமுறை பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தின்போது அவர் வாஷிங்டனில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் 2-வது முறையாக பேசி புதிய வரலாறு படைத்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசின் சார்பில் அவருக்கு பிரமாண்ட சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து அவர் வாஷிங்டனில் இருந்து எகிப்து நாட்டுக்கு அரசுமுறை பயணமாக தனி விமானத்தில் புறப்பட்டுச்சென்றார். அவரை அந்த நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி, ஒரு சிறப்பு நிகழ்வாக விமான நிலையத்துக்கு நேரில் வந்து வரவேற்றார். அங்கு பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. 26 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் எகிப்து சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இந்த நிலையில், இன்று எகிப்தின் ஹெலியோபொலிஸ் போர் நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். உலக போரின்போது வீர மரணம் அடைந்த 3,799 இந்திய படைவீரர்கள் நினைவாக அங்கு அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னத்தைப் பிரதமர் மோடி பார்வையிட்டு மரியாதை செலுத்தினார்.

முன்னதாக 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இந்தியாவைச் சேர்ந்த தாவூதி போரா சமூகத்தினரால் புதுப்பிக்கப்பட்டுள்ள அல்-ஹக்கீம் மசூதியை பிரதமர் மோடி பார்வையிட்டார். மசூதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், பொருட்கள் உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி பார்வையிட்டார். அல்-ஹக்கீம் மசூதி நிர்வாகம் சார்பில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன. அதை தொடர்ந்து கெய்ரோவில் உள்ள மசூதிக்கு சென்ற பிரதமர் மோடி அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்