ஹமாஸ் படையினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு

ஹமாஸ் படையினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2023-10-08 02:26 GMT

டெஹ்ரான்,

இஸ்ரேல் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் இன்று திடீர் தாக்குதல் நடத்தின. பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக பதில் தாக்குதலில் இறங்கியுள்ளனர். போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. தொடர்ந்து காசாவில் ஹமாஸ் குழுவினர் பதுங்கி இருந்த இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப்படை பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

இஸ்ரேல் மீதான ஹமாஸ் படையின் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும் பிரதமர் மோடி இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், "இஸ்ரேல் மீதான பயங்கரவாத தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

தற்போது வரை வெளியாகியுள்ள தகவலின் படி  இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 250 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

இஸ்ரேலின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் எச்சரிக்கை அறிவிப்பான்கள் ஒலிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வெடிகுண்டு தாக்குதல்களில் இருந்து தப்பும் வகையில், புகலிடங்களில் பதுங்கி கொள்ளும்படி இஸ்ரேலிய அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

இந்நிலையில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதில் ஹமாஸ் படையினர் மீது தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாகவும், எனவே காசாவை விட்டு மக்கள் வெளியேற வேண்டும்.

மேலும் தாக்குதல் நடத்த ராணுவத்தினர் தயாராக உள்ளனர் என்றும், காசாவில் ராணுவ வீரர்கள் தொடர்ந்து குவிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் அதில் கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்