உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் வெளியேற ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம் - வாக்களிப்பை புறக்கணித்த இந்தியா...!

உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் வெளியேற வேண்டுமென ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Update: 2023-02-24 02:37 GMT

வாஷிங்டன்,

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஓராண்டு நிறைவடைந்துவிட்டது. போர் இன்று 366-வது நாளை எட்டியுள்ளது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.

போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஐநா சபையில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

193 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐ.நா. சபையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 141 நாடுகள் வாக்களித்தன. 7 நாடுகள் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன. இந்தியா, சீனா உள்பட 32 நாடுகள் இந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறின.

141 நாடுகள் உக்ரைனில் இருந்து ரஷிய படைகள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று வாக்களித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்