உலகத்தின் மவுனம் கலைய இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்?-ஸ்காட்லாந்து மந்திரி ஹம்ஸா யூசஃப்

காசா மீதான தாக்குதலுக்கு ஸ்காட்லாந்து மந்திரி ஹம்ஸா யூசஃப் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

Update: 2023-10-28 02:39 GMT

எடின்பர்க்,

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 22-வது நாளை எட்டியுள்ளது. போரை முடிவுக்கு கொண்டுவர ஐ.நா.வும், உலக நாடுகள் பலவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் ஹமாசை ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வரை போரை நிறுத்தப் போவதில்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக கூறிவருகிறது. 21 நாட்களாக காசா மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலை தொடங்க மிக தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்காக அவ்வப்போது காசாவுக்குள் பீரங்கிகளையும், ராணுவ வீரர்களையும் அனுப்பி ஒத்திகையில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த புதன்கிழமை இரவோடு இரவாக காசாவுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் பீரங்கிகள் வடக்கு காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினரின் நிலைகளை தாக்கிவிட்டு மீண்டும் இஸ்ரேல் எல்லைக்கு திரும்பின.

இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் நேற்று மீண்டும் காசாவுக்குள் தரைவழியாக சென்று தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் டிரோன்களின் ஆதரவுடன் காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் பீரங்கிகள் காசாவின் புறநகர் பகுதிகளில் உள்ள ஹமாஸ் அமைப்பின் நிலைகளை தாக்கின. இந்த தாக்குதலால் காசாவில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. போரில் பலியானவர்களில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆவர். 

இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் தற்போது காசா பகுதிகளில் இணைய மற்றும் மொபைல் சேவைகள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதற்கு ஸ்காட்லாந்து மந்திரி ஹம்ஸா யூசஃப் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதனை தனது அதிகாரபூர்வ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதில், காசா மிக மோசமான குண்டு வீச்சு தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது; தொலைத்தொடர்பு சேவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது;  இந்த உலகம் தன் மவுனத்தைக் கலைக்க இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்? என்று அதில் கேட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்