ஆப்கானிஸ்தானில் கனமழை: 40 பேர் பலி; 350 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் கனமழையால், நங்கார்ஹாரின் பல்வேறு பகுதிகளில் 400 வீடுகள் மற்றும் 60 மின்கம்பங்கள் வரை சேதமடைந்து உள்ளன.

Update: 2024-07-17 09:05 GMT

காபுல்,

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கனமழை பெய்து பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. இதில், 40 பேர் உயிரிழந்து உள்ளனர். 350 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதில் வீடு இடிந்து விழுந்ததில், ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள் 5 பேர் பலியாகி உள்ளனர்.

இதுபற்றி பொது சுகாதார அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷராபத் ஜமன் அமர் கூறும்போது, காயமடைந்த 347 பேர் நங்கார்ஹார் மாகாணத்தின் ஜலாலாபாத் நகரில் உள்ள நங்கார்ஹார் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

கனமழையால், நங்கார்ஹாரின் பல்வேறு பகுதிகளில் 400 வீடுகள் மற்றும் 60 மின்கம்பங்கள் வரை சேதமடைந்து உள்ளன. ஜலாலாபாத் நகரில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. கடந்த மே மாதத்தில், கனமழையால் பாக்லான் மாகாணம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதில் சிக்கி, 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிப்படைந்தன. இதனை தொடர்ந்து உதவி அமைப்புகள் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்