ஜி20 மாநாடு: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - பிரதமர் மோடி சந்திப்பு! இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய பேச்சுவார்த்தை

ஜி-20 மாநாட்டிற்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் பிரதமர் மோடி இன்று முக்கிய சந்திப்பை நடத்தினர்.

Update: 2022-11-15 11:20 GMT

பாலி,

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சென்றுள்ள, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று முக்கிய சந்திப்பை நடத்தினர்.

இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் இருதரப்பு ஒத்துழைப்பை ஆய்வு செய்தனர். இந்த சந்திப்பின் போது பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இருதரப்பு மூலோபாய கூட்டுறவை வலுவாக்குதல், குவாட் கூட்டமைப்பில் நெருங்கிய ஒத்துழைப்பு அளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலம் சார்ந்த துறைகளில் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆய்வு செய்தனர்.

இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை வலுப்படுத்த அமெரிக்க அதிபர் பைடனின் தொடர்ச்சியான ஆதரவுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். அதனை தொடர்ந்து, இருநாட்டு தலைவர்களும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவை சந்தித்தனர்.


ஜி20 தலைமைப்பொறுப்பை இந்தியா ஏற்கவுள்ள நிலையில், 'வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதில் கவனம் செலுத்தப்படும்' என்று இந்தியா தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்