சீனாவில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது அதிகரிப்பு

சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.

Update: 2024-09-14 00:14 GMT

பீஜிங்

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் தொகை சரிந்து வருகிறது. அதே வேளையில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார்.

கடந்த 1949-ல் 36 ஆண்டுகளாக இருந்த சீனர்களின் சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 55 (உடல் உழைப்பு தொழில்களுக்கு 50) என்ற நிலையில் மாற்றமில்லை. இதனால் அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வருகிறது. இது அந்த நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தது.

இந்த நிலையில் சீனாவில் சட்டபூர்வ ஓய்வூதிய வயதை படிப்படியாக உயர்த்தும் முடிவுக்கு தேசிய மக்கள் காங்கிரசின் நிலைக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது. அதன்படி ஆண்களுக்கு ஓய்வு பெறும் வயது 60-ல் இருந்து 63 ஆகவும், பெண்களுக்கு 55-ல் இருந்து 58 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதே போல் உடல் உழைப்பு தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு ஓய்வு பெறும் வயது 50-ல் இருந்து 55 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி முதல் அமலுக்கு வரும் எனவும், அடுத்த 15 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதியோர் காப்பீட்டு ஊக்குவிப்பு செயல்முறைகளை செம்மைப்படுத்துதல், சட்டப்பூர்வ ஓய்வூதிய வயதைக் கடந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் நலன்களை உறுதி செய்தல், முதியோர் பராமரிப்பு மற்றும் குழந்தைப் பராமரிப்புச் சேவைகளை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள 14வது தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழுவின் 11வது அமர்வு ஒப்புதல் அளித்துள்ளது. சீன மக்களின் சராசரி ஆயுட்காலம், சுகாதார நிலைமைகள், மக்கள்தொகை அமைப்பு, கல்வி நிலை ஆகியவற்றின் விரிவான மதிப்பீட்டின் அடிப்படையில் இந்த திட்டம் ஏற்கப்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்