எங்கும் போகக்கூடாது.. உக்ரைன் முன்னாள் அதிபர் நாட்டை விட்டு வெளியேற தடை

உக்ரைனில் இருந்து புறப்பட்டு சென்ற பெட்ரோ போரோஷென்கோ, எல்லையில் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டார்.

Update: 2023-12-03 11:08 GMT

கீவ்:

உக்ரைன்-ரஷியா போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ (வயது 58) வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். 

இந்த சுற்றுப்பயணத்தின்போது அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் மைக் ஜான்சனை சந்திக்கவும், போலந்து பாராளுமன்றத்திற்கு செல்லவும் திட்டமிட்டிருந்தார். அதன்பின்னர் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பனை சந்திக்க முடிவு செய்ததாகவும் தகவல் வெளியானது.

ரஷிய அதிபர் புதினை ஹங்கேரி பிரதமர் ஆர்பன் பாராட்டியதோடு, ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான உக்ரைன் அரசின் முயற்சியை ஆதரிக்க மறுத்தவர். இதனால் உக்ரைன் அரசு அவர் மீது அதிருப்தியில் உள்ளது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து நேற்று புறப்பட்டார் பெட்ரோ போரோஷென்கோ. ஆனால் அவர் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார்.

ஹங்கேரி பிரதமரை சந்திக்க திட்டமிட்டதால் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ நாட்டை விட்டு வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற அனுமதி இருந்தும் தன்னை திருப்பி அனுப்பியதாகவும், எல்லையில் தனக்கு நேர்ந்தது, ஒற்றுமை மீதான தாக்குதல் என்றும் போரோஷென்கோ கூறினார். ஆனால், ஹங்கேரி பிரதமர் ஆர்பனை சந்திக்க திட்டமிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

உக்ரைன் ராணுவ சட்டத்தின்படி, 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆண்கள் சிறப்பு அனுமதி பெறாவிட்டால் நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்