தனது வாகனத்தில் சிக்கி உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளரின் வீட்டிற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்த இம்ரான்கான்

இம்ரான்கானின் வாகனத்தில் சிக்கி பிரபல செய்தி நிறுவனத்தில் பத்திரிக்கையாளர் உயிரிழந்தார்.

Update: 2022-10-31 10:39 GMT

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான்கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும், பாகிஸ்தானின் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என கூறி வருகிறார்.

ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சஃப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வப்போது பேரணி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், இம்ரான்கான் தலைமையில் நேற்று பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. பேரணிக்காக பயன்படுத்தி வரும் கண்டெய்னர் லாரி வாகனத்தில் இம்ரான்கான் பயணித்து பேரணியில் பங்கேற்றார். ஆயிரக்கணக்கானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர். இந்த பேரணி நிகழ்வுகளை பல்வேறு செய்தி நிறுவனங்களின் பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்தனர்.

இதனிடையே, இம்ரான்கானின் பேரணியில் பங்கேற்று பாகிஸ்தானின் பிரபல 'சேனல் 5' செய்தி நிறுவனத்தின் பெண் பத்திரிக்கையாளர் சடாப் நயீம் செய்தி சேகரித்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக இம்ரான்கான் பயணித்த கண்டெய்னர் லாரி வாகன சக்கரத்தில் சிக்கி சடாப் நயீம் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

பெண் பத்திரிக்கையாளர் சடாப் நயீம் மீது இம்ரான்கான் பயணித்த வாகனம் ஏறியதில் அவர் உடல் நசுங்கி உயிரிழந்ததாக சேனல் 5 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேவேளை, இம்ரான்கான் பயணித்த கண்டெய்னர் லாரி மீது ஏற முயன்று தவறி கீழே விழுந்து வாகனத்தின் டயரில் சிக்கி சடாப் நயீம் உயிரிழந்ததாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தனது வாகனத்தில் சிக்கி பெண் பத்திரிக்கையாளர் உயிரிழந்ததையடுத்து இம்ரான்கான் பேரணியை ஒத்திவைத்தார். இதனை தொடர்ந்து உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளர் சடாப் நயீமின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது வாகனத்தில் சிக்கி பெண் பத்திரிக்கையாளர் சடாப் நயீமின் வீட்டிற்கு இம்ரான்கான் இன்று நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். மேலும், சடாப் நயீமின் குடும்பத்தினரை சந்தித்த இம்ரான்கான் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்