லெபனான்: ஹிஸ்புல்லாவுடன் நடந்த மோதலில் 8 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பெய்ரூட்டின் புறநகர்ப் பகுதிகளை குறிவைத்து மூன்று இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2024-10-02 21:44 GMT

பெய்ரூட்,

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முன்தினம் அங்கு தரைவழி தாக்குதலை தொடங்கியது.

இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தாக்குதலை தொடங்கி இருப்பதாகவும், சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப இந்த ராணுவ நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.

இஸ்ரேல் எல்லையில் உள்ள இரும்பு வேலிகள் மற்றும் மதில் சுவர்களை உடைத்தெறிந்துவிட்டு இஸ்ரேலிய படைகள் லெபனானுக்குள் ஊடுருவின. அப்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதில் எந்திர துப்பாக்கிகள், ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் தெற்கு லெபனானில் தற்போது நடைபெற்றுவரும் மோதல்கள் முதல் சுற்றுப் போரின் ஒரு பகுதி என்று ஹிஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா நேரடி மோதல்களை அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் ராணுவம் தங்கள் மண்ணில் ஊடுருவியுள்ளதாக லெபனான் அரசு தெரிவித்தது.

லெபனானில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் ஹைட்ஸ்-இஸ்ரேல் எல்லையோரத்தில் ஐ.நா. கண்காணிப்பில் உள்ள நீலக் கோடு எல்லையை இஸ்ரேல் மீறி உள்ளே வந்திருப்பதாக லெபனான் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதனிடையே தெற்கு லெபனானில் உள்ள 50 கிராமங்களை சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் எச்சரித்தது.

இந்த நிலையில் தெற்கு லெபனானில் இருவேறு இடங்களில் நடந்த மோதலில் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 8 இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது. தெற்கு லெபனானில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது 22 வயதான இளம் ராணுவ அதிகாரி உள்பட 8 வீரர்களை இழந்ததாகவும், அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியது.

இதனிடையே பெய்ரூட்டின் மக்கள்தொகை அடர்த்தியான தெற்கு புறநகர்ப் பகுதிகளில் அதிகமான இஸ்ரேல் ஏவுகணைகள் வான்வழித் தாக்குதல்கள் நடத்தின. அங்கு ஹிஸ்புல்லாவின் மிக முக்கியமான தளம் உள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரேலிய தாக்குதல்கள் லெபனான் முழுவதும் 1,200 க்கும் மேற்பட்ட மக்களைக் கொல்லப்பட்டு, 1.2 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சூழலில் காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுமழை பொழிந்தன. தெற்கு காசாவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பெண்கள் சிறுவர்கள் உள்பட 51 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்