இஸ்ரேல் தீவிர தாக்குதல்: கடந்த 24 மணி நேரத்தில் 46 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் தகவல்
இஸ்ரேல் தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டதுடன், 85 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெய்ரூட்,
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக வான்வழி தாக்குதலை நடத்தி வந்த இஸ்ரேல் நேற்று முன்தினம் அங்கு தரைவழி தாக்குதலை தொடங்கியது.
இஸ்ரேலின் எல்லைக்கு அருகில் உள்ள கிராமங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் தாக்குதலை தொடங்கி இருப்பதாகவும், சூழலுக்கும், தேவைக்கும் ஏற்ப இந்த ராணுவ நடவடிக்கை முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்கியதை தொடர்ந்து, இஸ்ரேல் ராணுவம் நேற்று லெபனானில் தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தியது.
இஸ்ரேல் எல்லையில் உள்ள இரும்பு வேலிகள் மற்றும் மதில் சுவர்களை உடைத்தெறிந்துவிட்டு இஸ்ரேலிய படைகள் லெபனானுக்குள் ஊடுருவின. அப்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இஸ்ரேல் வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதில் எந்திர துப்பாக்கிகள், ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டுகள் மற்றும் பீரங்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் லெபனான் முழுவதும் "இஸ்ரேலின் தாக்குதல்களால்" 46 பேர் கொல்லப்பட்டதாகவும் 85 பேர் காயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒரு மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.