ரஷிய அதிபர் புதினுடன் ராஜ்நாத்சிங் சந்திப்பு
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார்.;
மாஸ்கோ,
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 3 நாள் அரசு முறை பயணமாக ரஷியா சென்றுள்ளார். அங்கு அவர் நேற்று தலைநகர் மாஸ்கோவில் உள்ள அதிபர் மாளிகையில் நடைபெற்ற இந்தியா-ரஷியா ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 21-வது கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்துக்கு பின் ராஜ்நாத் சிங், ரஷிய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அன்பான வாழ்த்துகளை தெரிவித்தார். தொடர்ந்து இருநாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசனை நடத்தினர்.
பேச்சுவார்த்தையின்போது ராஜ்நாத்சிங் "நமது நாடுகளுக்கிடையேயான நட்புறவு மிக உயர்ந்த மலையை விட உயர்ந்தது மற்றும் ஆழமான கடலை விட ஆழமானது. இந்தியா தனது ரஷிய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் இது தொடரும்" என்றார்.