நைஜீரியா: ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து - 100 பேர் பலி?

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2024-10-03 00:19 GMT

Image Courtesy  ; AFP (File Photo)

அபுஜா,

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. அந்நாட்டின் நைஜர் மாகாணத்தில் நைஜர் ஆறு உள்ளது. அந்த ஆற்றில் நேற்று ஒரு படகு சென்றது. அந்த படகில் சுமார் 300 பேர் பயணித்தனர். இஸ்லாமிய மத விழாவில் பங்கேற்றுவிட்டு அனைவரும் படகில் வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

மொக்வா என்ற பகுதியில் இரவு 8 மணியளவில் சென்றபோது படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் ஆற்றில் மூழ்கி பரிதவித்த 150 பேரை உயிருடன் மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ஆற்றில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்