வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டை சுற்றி வளைத்த போராட்டக்காரர்கள்: தலைமை நீதிபதி பதவி விலகல்

வங்காளதேசத்தில் போராட்டக்காரர்கள் சுப்ரீம் கோர்ட்டை சுற்றி வளைத்த நிலையில் தலைமை நீதிபதி பதவி விலகினார்.

Update: 2024-08-10 15:34 GMT

டாக்கா,

வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டிற்கு எதிராக நடைபெற்ற மாணவர்கள் போராட்டம் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசுக்கு எதிராக திரும்பியது. இதையடுத்து, பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனிஸ் வங்காளதேச இடைக்கால அரசின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், வங்காளதேச சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் அவாமி லீக் கட்சிக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டவர் என மாணவர் அமைப்புகள் குற்றஞ்சாட்டின. மேலும், புதிய இடைக்கால அரசு சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளிக்கலாம் என தகவல்கள் பரவின.

இதனால், தலைமை நீதிபதி பதவி விலக வேண்டும் இல்லையென்றால் அவரது வீட்டை சூறையாடுவோம் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும், நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுப்ரீம் கோர்ட்டை முற்றுகையிட்டு ஒருமணி நேரத்தில் தலைமை நீதிபதி ஹசன் பதவி விலக வேண்டுமென எச்சரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஹசன் தனது பதவியை ராஜினாமா செய்தார். பதவி விலகல் கடிதத்தை அவர் சட்ட அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மற்றும் நாட்டின் பிற நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தலைமை நீதிபதி பதவில் இருந்து விலகுவதாக ஹசன் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்