இஸ்ரேல்: தன்னை விட்டுவிடும்படி கெஞ்சிய இளம்பெண் இரக்கமின்றி சுட்டுக்கொலை - அதிர்ச்சி வீடியோ

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர்.

Update: 2023-11-21 11:48 GMT

ஜெருசலேம்,

இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். மேலும், இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாமுனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர், ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர். இதனிடையே, போர் இன்று 46 வது நாளாக நீடித்து வருகிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் 13 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 191 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புதிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள கிப்ருட் நகரில் நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதல் வீடியோவை இஸ்ரேல் அரசு வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் தாக்குதலில் இருந்து தப்பியோட முயற்சித்தனர். அப்போது, இளம்பெண் ஒருவர் ஹமாஸ் ஆயுதக்குழுவினரிடமிருந்து தப்பியோடினார். பின் தொடர்ந்து சென்ற ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த பயங்கரவாதி அவரை சுற்றிவளைத்தார். இதனால், அதிர்ச்சியடைந்த அப்பெண் சாலையருகே மண்டியிட்ட வாறு தன்னை உயிருடன் விட்டுவிடும்படி கெஞ்சினார். ஆனால், ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த பயங்கரவாதி இரக்கமின்றி இஸ்ரேலிய இளம்பெண்ணை சுட்டுக்கொன்றார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்