என்னை பதவியில் இருந்து அகற்ற “வெளிநாட்டு சதி” கதறும் இம்ரான்கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பதவியில் இருந்து தன்னை அகற்றுவதற்கு வெளிநாட்டு சதி நடப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.;

Update:2022-03-28 11:34 IST
Image Courtesy: Facebook | ImranKhanOfficial
இஸ்லாமாபாத், 

பாகிஸ்தானில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கத்துக்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசே காரணம் எனக்கூறி அவரது அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

இம்ரான்கானின் சொந்த கட்சி உறுப்பினர்கள் சிலரே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்கக்கூடும் என்பதால் ஆட்சி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்ரான்கான் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மந்திரிகள் கடந்த சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாமல் மாயமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாயமானவர்களில் 25 பேர் மத்திய மந்திரிகள் என்றும் மற்ற அனைவரும் மாகாண மந்திரிகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பாகிஸ்தான் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்நோக்கியுள்ள அந்நாட்டு பிரதமர் இம்ரான்கானுக்கு ஆதரவாக தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதரவாளர்கள் பேரணியில் உரையாற்றிய பிரதமர்  இம்ரான்கான்  பிரதமர் பதவியில் இருந்து தன்னை அகற்றுவதற்கு வெளிநாட்டு சதி நடப்பதாகவும் இதற்காக வெளிநாடுகளில் இருந்து பாகிஸ்தானுக்கு பணம் அனுப்பப்படுவதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார்.

மேலும் அவர் எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது, ஆனால் தேசிய நலன்களில் நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம்," என்று கூறினார்.

இம்ரான் கானின் இந்த குற்றச்சாட்டு பாகிஸ்தான் அரசியலில் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. 

மேலும் செய்திகள்