அயர்லாந்து ஏரியில் நீச்சல் அடிக்க சென்ற கேரளாவை சேர்ந்த 2 மாணவர்கள் பலி

அயர்லாந்து ஏரியில் நீச்சல் அடிக்க சென்ற கேரளாவை சேர்ந்த 2 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-08-31 05:32 GMT



டப்ளின்,



வடக்கு அயர்லாந்தில் டெர்ரி நகருக்கு வெளியே எனாக் லக் என்ற பகுதியில் உள்ள ஏரி ஒன்றில் குளிப்பதற்காக நண்பர்கள் 6 பேர் சென்றுள்ளனர். அவர்கள் ஏரியில் மூழ்கி குளித்தபோது, ஆழம் நிறைந்த பகுதியில் சிக்கி தவித்து உள்ளனர். அவர்களது கூச்சல் சத்தம் கேட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, வடக்கு அயர்லாந்தின் ஆம்புலன்ஸ், அதிவிரைவு துணை மருத்துவர், அவசரகால பணியாளர்கள், ஆம்புலன்ஸ் அதிகாரி உள்ளிட்டோர் சம்பவ பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு ஏர் ஆம்புலன்சும் சென்றது.

ஏரியில் நடந்த மீட்பு பணியில் ஒருவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், அந்த மாணவர் உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர். மீட்கப்பட்ட 2-வது நபர் சம்பவ பகுதியிலேயே உயிரிழந்து விட்டார்.

3-வது மாணவர் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற 3 பேருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. எனினும், அவர்கள் இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என வடக்கு அயர்லாந்து போலீசார் தெரிவித்து உள்ளனர்.

உயிரிழந்த 2 மாணவர்களும் இங்கிலாந்து நாட்டில் வசித்து வந்துள்ளனர். அவர்கள் கேரளாவை சேர்ந்தவர்கள். ஒருவர் ரூவன் சைமன் என்றும் மற்றொருவர் ஜோசப் செபாஸ்டியன் என்றும் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்கு அயர்லாந்து பிரதமர் மிச்சேல் மார்ட்டின் வருத்தம் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்