காசாவில் 10 கி.மீ. நீள பெரிய சுரங்க பாதை; நெட்வொர்க்கை கைப்பற்றி அழித்தது இஸ்ரேல்

காசாவில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது.

Update: 2024-02-27 02:03 GMT

டெல் அவிவ்,

காசாவில் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு சுரங்கங்களை அமைத்து அதற்குள் பதுங்கி இருந்தபடி செயல்பட்டு, இஸ்ரேலுக்கு சவாலாக இருந்து வருகிறது. இதனால், அந்த அமைப்புக்கு எதிரான போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நேற்று கூறும்போது, காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் 10 கி.மீ. நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்க பாதையை இஸ்ரேல் ராணுவ வீரர்கள் கண்டறிந்து உள்ளனர்.

காசா முனையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில், பூமிக்கடியில் பயங்கரவாத நெட்வொர்க் ஒன்று செயல்பட்டு வந்தது. இதனை தொடர்ந்து, அந்த சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் படையினர் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன்பின் அதனை ஆய்வு செய்து, நெட்வொர்க்கின் பெரும் பகுதியையும் அழித்தனர்.

இந்த சுரங்கம் ஆனது, மத்திய காசாவில் அமைந்த பல்வேறு முகாம்களை ஒட்டிய துருக்கி மருத்துவமனை மற்றும் காசா நகரின் ஜெய்தவுன் பகுதியில் உள்ள இஸ்ரா பல்கலைக்கழக கட்டிடம் ஆகிய இரண்டையும் இணைக்கிறது.

சுரங்கத்திற்குள் கழிவறைகள், ஆயுதங்களை பதுக்கி வைக்கும் கொள்கலன் வசதிகள் மற்றும் போருக்கான உபகரணங்கள், சுரங்க நுழைவு பகுதியில் நெட்வொர்க் கிளை மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகளின் உடல்கள் ஆகியவை இருந்துள்ளன.

காசாவை சுற்றியுள்ள பகுதிகளில் அந்த பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் இயங்குவதற்காக இந்த சுரங்க நெட்வொர்க் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த அமைப்பு, ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கோடிக்கணக்கான மதிப்பிலான நிதியை செலவிட்டு உள்ளது.

இதன்படி, பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் ஆகியவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனை கைப்பற்றி, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் என இஸ்ரேல் படை தெரிவித்து உள்ளது.

இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால், பாலஸ்தீனர்களின் மொத்த உயிரிழப்பு 29,092 ஆக உள்ளது என்று காசா சுகாதார அமைச்சகமும் தெரிவித்து இருந்தது. உயிரிழந்தவர்களில் 3-ல் 2 பங்கு மக்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 69 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஒட்டுமொத்த வெற்றி கிடைக்கும் வரை போரானது தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதனால், எகிப்திய எல்லையையொட்டிய தெற்கு பகுதியில் அமைந்த ரபா நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் செல்ல திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்