சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

மதுரையில் 20 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது.

Update: 2022-06-25 20:38 GMT

மதுரையில் 20 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது.

சப்-இன்ஸ்பெக்டர் பணி

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதில் பட்டப்படிப்பு முடித்த ஆண்கள், பெண்கள் என சுமார் 2.21 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இந்த தேர்வுக்கு மதுரை மாவட்டத்தில் இருந்து 14,900 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் முறைப்படி ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது.

அவர்களுக்கான எழுத்து தேர்வு நேற்று தொடங்கியது. மதுரையில் மதுரை கல்லூரி, சேதுபதி மேல்நிலைப்பள்ளி, கேப்ரன்ஹால், ஓ.சி.பி.எம். பள்ளி உள்ளிட்ட 20 மையங்களில் காலை பொது பிரிவினருக்கான முதன்மை எழுத்து தேர்வு நடந்தது. அதில் 13,948 பேருக்கு 11,673 பேர் தேர்வு எழுதினார்கள். 2,275 பேர் தேர்வு எழுதவில்லை.

தமிழ் மொழி தேர்வு

மதியம் நடந்த தமிழ் மொழிக்கான தகுதித்தேர்வில் 14,340 பேருக்கு 11,990 பேர் தேர்வு எழுதினார்கள். 2,350 பேர் தேர்வு எழுத வரவில்லை. இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலீஸ் துறையினருக்கான ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தோருக்கான எழுத்துத்தேர்வு நடக்கிறது.

மதுரை காமராஜர் சாலை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். மற்ற மையங்களிலும் அவர் ஆய்வு நடத்தினார். மேலும் தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கடுமையான சோதனைக்கு பின்பு, அனுமதி சீட்டு மற்றும் அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். கால்குலேட்டர்கள் மற்றும் செல்போன் உள்ளிட்ட பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. தேர்வு மையத்தில் போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்தும் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த தேர்வுக்காக மதுரை பெரியார் பஸ் நிலையம், எம்.ஜி.ஆர்.பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்