உலக சதுரங்க சாம்பியன் போட்டி: அரியலூர் மாணவி வெண்கல பதக்கம் வென்று சாதனை

உலக சதுரங்க சாம்பியன் போட்டியில் அரியலூர் மாணவி வெண்கல பதக்கம் வென்று சாதனை புரிந்தார்.

Update: 2023-06-15 19:01 GMT

உலக சதுரங்க கழகத்தின் சார்பில் ஜார்ஜியா நாட்டில் 8 வயது முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக சதுரங்க சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, உஸ்பெகிஸ்தான், அமெரிக்கா, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர். கடந்த 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சர்வாணிகா 8 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்டு விளையாடினார். இதில் மொத்தம் 11 சுற்றுகளில் 8 சுற்றுகளில் வெற்றி பெற்று உலக அளவில் 3-ம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் குறிப்பாக அரியலூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். மேலும், நவம்பர் மாதம் நடைபெற உள்ள காமன்வெல்த் சதுரங்க விளையாட்டு போட்டியில் சர்வாணிகா கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து சாதனை படைத்த சிறுமி சர்வாணிக்கா நேற்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் மூலம் அரியலூர் ரெயில் நிலையத்திற்கு தனது பெற்றோருடன் வந்தார். அப்போது அவருக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேகளீசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின் உள்ளிட்டோர் சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இதுகுறித்து சிறுமி சர்வாணிகா நிருபர்களிடம் கூறியதாவது:- கிர்கிஸ்தான் நாட்டில் வருகிற 30-ந் தேதி முதல் ஜூலை மாதம் 10-ந் தேதி வரை மேற்கு ஆசிய இளைஞர் செஸ் போட்டி நடைபெறுகிறது. போதிய பண வசதி இல்லாத காரணத்தினால் இந்த போட்டியில் என்னால் பங்குபெற முடியவில்லை. மேலும் காமன்வெல்த் மற்றும் உலக சதுரங்க சாம்பியன் போட்டிகளில் பங்குபெற மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி அளித்தால் சிறப்பாக விளையாடி நாட்டிற்கு பெருமை பெற்று தருவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்