தொழிலாளர்களின் சம்பள விவகாரம்: தமிழகம் முழுவதும் வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம்- மாநில பொதுச்செயலாளர் தகவல்

தொழிலாளர்களின் சம்பள பாதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி கூறினார்.

Update: 2022-05-31 13:43 GMT

குன்னூர்

தொழிலாளர்களின் சம்பள பாதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி கூறினார்.

பொதுக்குழு கூட்டம்

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ஐ.எம்.யு. நினைவு அரங்கில் உள்ளாட்சிகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தில் உள்ளாட்சி பணியாளர்கள் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் ராதாகிருஷ்ணன், சம்மேளன தலைவர் ஆறுமுகம், உள்ளாட்சி சங்க மாவட்ட பொது செயலாளர் ரகுநாதன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் போஜராஜ், நீலகிரி மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மாநில பொது செயலாளர் மூர்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டம் உள்ளது. இதை வழங்க பல நீதிமன்றங்களும் வலியுறுத்தியுள்ளன.

வருகிற 21-ந்தேதி ஆர்ப்பாட்டம்

குறிப்பாக மாநகராட்சிகளின் ஊழியர்களுக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும். ஆனால் நிர்வாகங்கள் அதனை தருவதில்லை. அதேநேரத்தில் மாநில அரசு ஊதியம் தொடர்பான ஆணை வெளியிட்டது. இதில் ரூ.16 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை வழங்க வேண்டும். இருப்பினும் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்பிறகு மாவட்ட நிர்வாகம், ஒப்பந்ததாரர்களுடன் ஒப்பந்தம் செய்து 6 ஆயிரம் எனக்கூறி தொழிலாளர்களுக்கு ரூ.4 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. மாநிலத்தை சுத்தமாக வைக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள் என அனைவருக்கும் சம்பளம் மிகவும் கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.இதை எதிர்த்தும், சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை வலியுறுத்தியும் தமிழக முழுவதும் அனைத்து உள்ளாட்சிகளிலும் வருகிற 21-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்