மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டம்
அறந்தாங்கியில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அறந்தாங்கி பகுதியில் உள்ள 52 ஊராட்சிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று கூறி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டு தங்களது குடும்ப அட்டையை ஒப்படைக்க போவதாகக் கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உங்களது கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள் என்று கூறினர். இதில் சமாதானம் அடைந்த பெண்கள் மனுக்களை எழுதி அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.