தேனூரில் பெண்கள் உண்ணாவிரதம்

சட்ட விரோதமாக மது விற்பவர்களை கைது செய்யக்கோரி தேனூரில் பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-22 18:05 GMT

உண்ணாவிரதம்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, தேனூரில் ஒரு தம்பதியினரும், தொட்டியபட்டியில் ஆண் ஒருவரும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வருகிறார்களாம். இதனை பாடாலூர் போலீசாரும், மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாததுபோல் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் சென்று விடுகிறார்களாம்.

இதனை கண்டித்தும், சட்ட விரோதமாக மது விற்பவர்களை கைது செய்யக்கோரியும், அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்யக்கோரியும் பயிர் அறக்கட்டளையை சேர்ந்த பெண்கள் நேற்று காலை திடீரென்று தேனூர் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு அறக்கட்டளையை சேர்ந்த பிரித்தி என்ற பெண்மணி தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் தேனூர், தொட்டியபட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனையை முற்றிலும் நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் பிடித்தவாறு கோஷங்களை எழுப்பினர்.

போலீசார் பேச்சுவார்த்தை

அப்போது மதியம் அவர்களிடம் பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா தலைமையிலான பெண் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். தேனூர், தொட்டியப்பட்டியில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். இனி 2 கிராமங்களிலும் சட்ட விரோத மது விற்பனை நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் போராட்டக்காரர்களிடம் உறுதி அளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மதியம் 3.15 மணியளவில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்த தேனூரை சேர்ந்தவரும், பெட்டி கடை நடத்தி வருபவர்களான கலியபெருமாள், அவரது மனைவி சாவித்திரி, தொட்டியப்பட்டியை சேர்ந்த அண்ணாதுரை ஆகிய 3 பேர் மீது பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்