வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கள்ளக்காதலன் 'கார்த்திக்' மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய பெண்...!

அந்த பெண்ணுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

Update: 2023-03-12 10:14 GMT

ஈரோடு,

வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் கள்ளக்காதலன் மீது இளம்பெண் கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளத்தொடர்பு

ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் 27 வயது வாலிபர் கார்த்திக். இவரது உறவுக்கார பெண் மீனா தேவி (வயது 27). மீனாவுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து மீனா தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது கார்த்திக்கிற்கும், மீனாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்துள்ளனர். கார்த்திக்கும், மீனாவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

வேறொரு பெண்ணை திருமணம்...

இந்த நிலையில் கார்த்திக்கிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார். இந்த விஷயம் கார்த்திக்கின் கள்ளக்காதலி மீனாவுக்கு தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மதியம் கார்திக் கள்ளக்காதலி மீனாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மீனா கார்த்திக்கிடம், "என்னை ஏமாற்றி விட்டு தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிக்கிறாயா"? என கேட்டுள்ளார். இதனால் மீனாவுக்கும் கார்த்திக்கிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

கொதிக்கும் எண்ணெயை...

ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த மீனா, அடுப்பில் கொதிக்க வைத்திருந்த பாமாயில் எண்ணெயை எடுத்து கார்த்தி மீது ஊற்றியுள்ளார். இதில் கார்த்திக்கின் முகம் மற்றும் தோள்பட்டை வெந்தது. எரிச்சல் தாங்க முடியாமல் கார்த்திக் அலறி துடித்தார். உடனே மீனா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். பின்னர் தாக்குதலுக்கு உள்ளான கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக பவானியில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதன்பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

விசாரணை

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பவானி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தப்பி ஓடிய மீனாவை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் கள்ளக்காதலன் கார்த்திக் மீது கொதிக்க வைத்திருந்த எண்ணெய்யை ஊற்றிய மீனாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஈரோட்டில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்