குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன்கிராமமக்கள் மறியல்

கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-08-10 18:14 GMT

குடிநீர் பிரச்சினை

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள துவார் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சிறு மின்விசை நீர் தொட்டி போன்றவை உள்ளன. ஆனால் இவற்றில் இருந்து பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் போதுமான அளவில் வினியோகம் செய்யப்படவில்லை.

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வந்தனர். குடிநீர் பிரச்சினையால் பெண்கள் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் எடுக்க 3 கிலோ மீட்டர் நடந்து சென்று விவசாய பம்பு செட்டில் குடிநீர் எடுத்து வர வேண்டி இருப்பதால் பெண்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் குடிநீர் கேட்டு கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலை துவார் பஸ் நிறுத்தம் முன்பு காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் கறம்பக்குடி-புதுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்