விக்கிரவாண்டியில் மேம்பாலம் கட்டப்படுமா?
விக்கிரவாண்டியில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
விக்கிரவாண்டி:
விழுப்புரத்தில் இருந்து வடக்கு திசையில் 13.கி.மீ. தூரத்தில் உள்ளது விக்கிரவாண்டி. தமிழகத்தின் தென் மாவட்டங்களை தமிழக தலைநகரான சென்னையை இணைக்கும் ஒரே சாலை இந்த சாலையாகும். நகரின் மையப்பகுதியில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தவிர்ப்பதற்காகவும், வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையிலும் 4 வழிச்சாலை அமைக்கப்பட்டது. அதன்பிறகு போக்குவரத்து நெரிசல் குறைந்தது. மாறாக வாகன விபத்துகள் அதிகரித்தன.
உயிர் பலி வாங்கிய சாலை
15 வார்டுகளை கொண்ட விக்கிரவாண்டி பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். 2008-ம் ஆண்டு விக்கிரவாண்டியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. விக்கிரவாண்டி புறவழிச்சாலையின் மேற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றியம், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம், போலீஸ் நிலையம், ரெயில் நிலையம், ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஆகியவை உள்ளன. இங்கு 116 கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்து செல்கிறார்கள்.
அவ்வாறு வருபவர்கள் இந்த புறவழிச்சாலையை கடந்து தான் செல்ல வேண்டும். இதனால் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை முனையில் மட்டும் 150-க்கு மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன. இதில் விலை மதிக்க முடியாத உயிர்களையும் காவு வாங்கி இருக்கிறது. பலர் காயமடைந்துள்ளனர்.
மேம்பாலம் கட்ட வேண்டும்
விபத்துகளை தடுக்கவும், உயிர் பலியை தடுக்கவும் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலை முனையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் 14 ஆண்டு கோரிக்கை ஆகும்.
இங்கு விபத்து நடக்கும் போதெல்லாம் சாலை மறியல் போராட்டம் நடப்பதும் வாடிக்கை ஆகிவிட்டது. அவ்வாறு போராட்டம் நடத்துபவர்களிடம் அரசு அலுவலர்கள், அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்துவார்கள். அப்போது அவர்கள், விரைவில் மேம்பாலம் கட்டுவதாக உறுதி அளிப்பார்கள். அதனை ஏற்று பொதுமக்களும் கலைந்து செல்வார்கள். அதோடு சரி, அதற்கு பிறகு அங்கு மேம்பாலம் கட்ட அதிகாரிகளோ, அரசியல் கட்சியினரோ நடவடிக்கை எடுப்பதில்லை. இனியும் தாமதிக்காமல் விக்கிரவாண்டி வடக்கு புறவழிச்சாலையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். இது குறித்து சிலர் கூறிய கருத்துகள் இதோ...
போராடுவோம்
விக்கிரவாண்டி முருகன்:-
விக்கிரவாண்டி நகரின் மையப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனால் பொதுமக்கள் அடிப்படை வசதி கேட்டு அரசு அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது விபத்தில் சிக்குகிறார்கள். இங்கு மேம்பாலம் கட்ட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாவட்ட கலெக்டர், அரசியல் கட்சியினரிடம் மனு கொடுத்தும் பயனில்லை. தொடர் விபத்தை தடுக்கவும், உயிர் பலியை தடுக்கவும் மிகப்பெரிய போராட்டம் நடத்துவதை தவிர வேறு வழி இல்லை.
மேம்பாலம் முக்கியம்
மேலகொந்தை கீதா:-
விக்கிரவாண்டிலிருந்து மேற்பகுதியில் மேலக்கொந்தை, புதுப்பாளையம், சின்னத்தச்சூர் தென்பேர், நாரசிங்கனூர், வழியாகசெஞ்சி வரை செல்லும் இந்த சாலை விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. இந்த கிராம பகுதியில் இருந்து வரும் விவசாய மக்கள் விக்கிரவாண்டிக்கு இந்த தேசிய நெடுஞ்சாலை கடந்து நகரில் உள்ளே வர வேண்டும். அப்படி சாலையை கடக்கும்போது விபத்து ஏற்படுகிறது. இந்த விபத்துக்களை தடுக்கும் வகையில் இந்த பகுதியில் மேம்பாலம் கண்டிப்பாக அமைத்துப் பட வேண்டும்.