பழுதடைந்த கல்லணைக்கால்வாய் பாலம் சீரமைக்கப்படுமா?

பழுதடைந்த கல்லணைக்கால்வாய் பாலம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-05-19 20:49 GMT

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே பழுதடைந்த கல்லணைக்கால்வாய் பாலம் சீரமைக்கப்படுமா? என கிராமமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

கல்லணைக்கால்வாய்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் திகழ்கிறது. ஆறுகள் பொதுவாக இயற்கையாகவே தோன்றி பள்ளத்தை நோக்கி செல்லும். ஆனால் கல்லணையில் தொடங்கி தஞ்சை மாநகரம் வழியாக செல்லும் கல்லணைக்கால்வாய் என்கிற புதுஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து சென்று கடைமடை வரை செல்கிறது.

இது விவசாயத்திற்காக மனிதர்களால் வெட்டப்பட்டது. பல்வேறு பொறியியல் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த கல்லணைக்கால்வாய் கட்டப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்த ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வரையிலான சுமார் 3 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனவசதி அளிக்கும் வகையில் கல்லணைக்கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் 337 கிளை வாய்க்கால்களை கொண்டுள்ளது.

பழுதடைந்த பாலம்

இந்த கல்லணைக்கால்வாயின் குறுக்கே பாலங்கள், மதகுகள் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பல பாலங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தஞ்சையை அடுத்த பொட்டுவாச்சாவடி அருகே கல்லணைக்கால்வாய் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்கள், லோடு ஆட்டோக்கள் சென்று வருகின்றன. நத்தம்படிபட்டிக்கும், பொட்டுவாச்சாவடிக்கும் இடையே இந்த பாலம் உள்ளது.

தஞ்சை மாநகரில் இருந்து பொட்டுவாச்சாவடி, கண்டிதம்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லக்கூடிய குறுக்குபாதையாகவும் இந்த பாலம் திகழ்கிறது. இப்படி பல்வேறு கிராமமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்படும் இந்த பாலம் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. பாலத்தில் மரம், செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. சில பகுதிகளில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.

எதிர்பார்ப்பு

மேலும் பாலத்தின் தரைபகுதியும் மிகவும் மோசமாக தான் காணப்படுகிறது. தற்போது கல்லணைக்கால்வாயில் சிமெண்டு தரைதளம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சமயத்தில் மோசமாக காணப்படும் பாலங்களையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது கிராமமக்களின் எதிர்பார்ப்பாகும்.

Tags:    

மேலும் செய்திகள்