பாலம் கட்டும் பணி விரைந்து முடிக்கப்படுமா?
விழுப்புரம் நகரில் மந்தகதியில் நடந்து வரும் பாலம் பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
விழுப்புரம்
மழைநீர் வடிகால் வாய்க்கால்
விழுப்புரம் நகரில் மழைக்காலத்தின்போது முக்கிய சாலையோரங்களிலும் குடியிருப்புகளிலும் மழைநீர் தேங்குவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு காரணம் வடிகால் வாய்க்கால் வசதிகள் இல்லாததாலும், ஏற்கனவே இருந்த சில வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பில் இருப்பதாலும், இன்னும் சில வாய்க்கால்கள் தூர்ந்து போயிருப்பதாலும் சாதாரண மழைக்கே சாலைகளில் வெள்ளம்போல் காட்சியளிக்கிறது.
இதனால் மழைக்காலங்களின்போது சாலையோரங்களிலும், குடியிருப்புகளிலும் தண்ணீர் தேங்காமல் இருக்கும் வகையில் விழுப்புரம் நகரில் சாலையோரங்களின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக சில முக்கிய இடங்களில் சாலையை கடந்து செல்லும் வாய்க்காலும் அமைக்கப்பட்டு வருகின்றன.
சாலை அமைக்கப்படவில்லை
அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகே விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையின் நடுவே மழைநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்காக கடந்த ஜூலை மாதம் 20-ந் தேதி பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணிகள் காரணமாக அச்சாலையில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஒருவழிப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன.
இந்த வடிகால் வாய்க்கால் பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதங்களுக்கும் மேலாகிறது. ஆனால் வாய்க்கால் பணிகள் முடிந்த இடத்தில் தார் சாலை அமைப்பதற்காக ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சாலை முழுவதுமாக பரப்பப்பட்டன. ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாகியும் இதுநாள் வரையிலும் அங்கு தார் சாலை அமைக்கப்படவில்லை. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு செல்கின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இச்சாலையில் செல்லும்போது சில சமயங்களில் ஜல்லிக்கற்களால் வழுக்கி கீழே விழுந்து விபத்தில் சிக்கும் நிலைமையும் ஏற்படுகிறது. அதோடு அப்பகுதியில் தார் சாலை போடப்படாததால் காற்றில் புழுதி பறக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
மேலும் இந்த வடிகால் வாய்க்கால் பாலம் அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயுடன் இணைக்கும் வகையில் பாலம் கட்டும் பணிகளை முழுமையாக முடிக்காமல் அரைகுறையாக விட்டுள்ளதால் அந்த பாலத்தின் கீழ்பகுதியில் கழிவுநீர் குட்டைபோல் தேங்கி நிற்பதால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அருகில் உள்ள கடை வியாபாரிகள் மிகவும் அவதியடைந்து வருவதோடு பாலம் கட்டும் பணிகளை விரைந்து முடித்து தார் சாலை போடாமல் அப்படியே கிடப்பிலேயே போட்டுள்ளதால் கடைகளின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர்.
எனவே இந்த வடிகால் வாய்க்கால் பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து தார் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் மிகுந்த எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து மளிகை கடை வியாபாரி அண்ணாமலை கூறுகையில், கொரோனா ஊரடங்கு காலமான 2 ஆண்டுகளில் கடைகளின் வியாபாரம் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போதுதான் வியாபாரம் ஓரளவிற்கு நடந்து வருகிறது. இந்த சூழலில் வடிகால் வாய்க்கால் பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கி 75 நாட்களாகிறது. இன்னும் அப்பணிகள் முழுவதுமாக முடிக்கப்பட்டு தார் சாலை போடவில்லை. இதனால் வாகன போக்குவரத்து குறைந்ததால் மக்கள் கூட்டமும் குறைந்துள்ளது. இதனால் எங்களைப்போன்ற கடை வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கழிவுநீர் செல்ல வழியின்றி பாலத்தின் கீழ் பகுதியில் தேங்கியுள்ளதால் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் பலவித தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. தற்போது புதிது, புதிதாக காய்ச்சலும் வருவதால் மிகவும் அச்சமாக உள்ளது. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்தபாடில்லை. இவ்வழியாக அரசு அலுவலகங்களுக்கு கலெக்டர் முதல் பல்வேறு அரசு அதிகாரிகளும் வாகனங்களில் செல்கின்றனரே தவிர யாருமே இப்பணிகளை விரைந்து முடித்து தார் சாலை போட நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே இப்பணிகளை விரைந்து முடித்து சாலை அமைக்க வேண்டும் என்றார்.
பால் வியாபாரி வெங்கடேசன் கூறுகையில், நான் தினமும் இவ்வழியாக சென்றுதான் நகரில் உள்ள டீக்கடைகளுக்கு பால் விற்பனை செய்து வருகிறேன். ஒரு நாளைக்கு 10 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை பால் விற்பனை செய்வேன். தற்போது கடை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் 5 லிட்டர் பால் விற்பனை செய்வதே பெரிய விஷயமாக உள்ளது. மேலும் சாலையில் ஜல்லிக்கற்கள் பரப்பிக்கிடப்பதால் புழுதி பறக்கிறது. இதனால் கண் எரிச்சல் ஏற்படுவதோடு இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி வழுக்கி கீழே விழுந்து செல்கின்றனர். எனவே மந்தகதியில் நடந்து வரும் இப்பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.