முறைப்படி ஆய்வு செய்து நிவாரணம் வழங்கப்படுமா?

பொறையாறு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முறைப்படி ஆய்வு செய்து நிவாரணம் வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-02-14 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை முறைப்படி ஆய்வு செய்து நிவாரணம் வழங்கப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

பரவலாக மழை

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 1-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை பரவலாக மழை பெய்தது. டெல்டா பகுதியில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் மழை பெய்ததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர்.

அரசு நிவாரணம் அறிவித்துள்ள நிலையிலும், கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

100 ஏக்கர் பாதிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் கொத்தங்குடி ஊராட்சி, வேலம்புதுக்குடி, ஐவேலி, கீழ்க்கரை, செருக்குடி ஆகிய பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. இந்த பகுதியில் சம்பா நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் கனமழை பெய்தது.

இதனால் ஒட்டுமொத்த நெற்பயிர்களும் கீழே சாய்ந்து மழைநீரில் மூழ்கி அழுகி போயுள்ளது. பெரும்பாலான பயிர்கள் அழுகிய நிலையிலும், முளைத்தும் காணப்படுகிறது. இது குறித்து ஐவேலி கீழ்க்கரையை சேர்ந்த விவசாயி பன்னீர்செல்வம் கூறியதாவது:-

நிவாரணம்

கனமழை ஏற்படும் போதெல்லாம் இப்பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாவது வாடிக்கையாக உள்ளது. அதே போன்று சமீபத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் அழுகியும், முளைத்தும் நாசமாகி இருக்கிறது.

ஆனால் இதுவரை எந்த ஒரு அதிகாரியும் இங்கு பாதிப்புகள் குறித்து பார்வையிடவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த பகுதியில் மழையால் நெற்பயிரில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முறையாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்