தாராசுரம் மீன் அங்காடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?

தாராசுரம் மீன் அங்காடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா?

Update: 2022-10-02 20:19 GMT

தாராசுரம் மீன் அங்காடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தாராசுரம்

கும்பகோணத்தை அடுத்துள்ள தாராசுரத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். தாராசுரத்தில் அசைவம் சாப்பிடும் பொதுமக்கள் மிக அதிகமாக உள்ளனர். ஆடு, கோழி, மீன், கருவாடு, நண்டு, இறால் உள்ளிட்ட இறைச்சி விற்பனைக்காக 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. குறிப்பாக மீன் விற்பனைக்கு 10 கடைகள் கொண்ட மீன் அங்காடி ஒன்று தஞ்சை மெயின் சாலையில் உள்ளது. இதில் 15-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன் விற்பனை செய்து வருகின்றனர். அங்காடிக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மீன் வாங்குவதற்காக வந்து செல்கின்றனர்.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் கும்பகோணம் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், ஆரியப்படையூர், சோழன் மாளிகை, உடையாளூர், பட்டீஸ்வரம், மாங்குடி, வளையப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் மீன் வாங்குவதற்காக தாராசுரம் மீன் அங்காடிக்கு வந்து செல்கின்றனர்.

அடிப்படை வசதிகள் இ்ல்லை

இந்த அங்காடியில் வியாபாரிகளுக்கு உயிர் மீன்களை உயிருடன் வைத்திருப்பதற்கான நீர் வசதி, வாடிக்கையாளர்கள் வந்து காத்திருந்து அமர்ந்து செல்ல நாற்காலி வசதிகள், வாகனங்களை நிறுத்துவதற்கான வசதி, மீன் சுத்தம் செய்யும் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் கூடுதல் வியாபாரிகளை விரிவுபடுத்துவதற்கான இட வசதியும் இல்லை. எனவே மீன் அங்காடிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய கட்டிடம்

இதுகுறித்து மீன் வியாபாரி ஒருவர் கூறுகையில், தாராசுரம் மீன் அங்காடி கும்பகோணத்தின் புறநகர் பகுதியில் மிகப்பெரிய அங்காடி ஆகும்‌. இங்கு சாதாரண நாட்களில் 500 கிலோ மீன் விற்பனை செய்யப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் 1500 கிலோ மீன் விற்பனையாகும். இங்கு மீன் விற்பனைக்கு ஏற்றவாறு போதுமான வசதிகள் இல்லை. மீன் விற்பனைக்கு மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் தேவை என கோரிக்கை விடுத்துள்ளோம். புதிய கட்டிடம் அமைந்தால் கூடுதலான வியாபாரிகள் மீன் விற்பனை செய்ய இங்கு வருவார்கள். அது மட்டும் அல்லாமல் தாராசுரத்தில் உள்ள தற்காலிக மீன் விற்பனை கடைகளை அரசு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் மீன் அங்காடியில் கூடுதல் மீன் விற்பனை ஆகும் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்