நிலவில் 'லேண்டர்' தரையிறங்குவது எப்போது? இஸ்ரோ அறிவிப்பு

நிலவில் ‘லேண்டர்’ தரையிறங்குவது எப்போது என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

Update: 2023-08-21 00:20 GMT

சென்னை,

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக 'சந்திரயான்-3' விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம் எல்.வி.எம்.3 ராக்கெட் மூலம் கடந்த மாதம் (ஜூலை) 14-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது.

அதன் பின்னர், புவி சுற்றுவட்டப் பாதையில் பூமியை சுற்றி வந்த 'சந்திரயான்-3' ஆகஸ்டு 1-ந் தேதி புவியீர்ப்பு விசையில் இருந்து விலக்கப்பட்டு, நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது. 5 நாள் பயணத்துக்குப் பிறகு ஆகஸ்டு 5-ந் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் 'சந்திரயான்-3' நுழைந்தது.

'லேண்டர்' பிரிப்பு

அதன்பிறகு, சுற்றுப்பாதையின் உயரம் 4 முறை படிப்படியாக குறைக்கப்பட்டு, நிலவுக்கு அருகே 'சந்திரயான்-3' கொண்டு வரப்பட்டது. கடந்த 17-ந் தேதி நிலவின் தரையில் இருந்து 153 கி.மீ. உயரத்தில் 'சந்திரயான்-3' விண்கலம் இருந்தபோது, அதில் உள்ள உந்துவிசை கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட்டது.

அதன்பிறகு, உந்துவிசை கலன், லேண்டர் ஆகியவை நிலவை ஒட்டிய சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்தன. இனி உந்துவிசை கலன் தொடர்ந்து நிலவை சுற்றியபடி அடுத்த சில மாதங்களுக்கு ஆய்வுப்பணியை மேற்கொள்ளும்.

நிலவுக்கு நெருக்கமாக வந்தது

அதேநேரத்தில், லேண்டரின் சுற்றுவட்டப் பாதையின் உயரத்தைக் குறைத்து, நிலவில் அதை தரையிறக்குவதற்கான ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக, திரவ வாயு எந்திரம் இயக்கத்தின் மூலம், நிலவின் தரையில் இருந்து 113 கி.மீ. உயரம் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டர் கருவி கடந்த 18-ந் தேதி கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து 2-வது கட்டமாக லேண்டர் கருவியின் சுற்றுவட்டப் பாதையின் உயரம் நேற்று முன்தினம் வெற்றிகரமாக குறைக்கப்பட்டது. தற்போது, நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக வந்துள்ள லேண்டர், குறைந்தபட்சம் 25 கி.மீ. தூரத்திலும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவிலும் சுற்றிக் கொண்டிருக்கிறது.

எச்சரிக்கையுடன் கண்காணிப்பு

அடுத்ததாக, 40 நாள் தொடர் பயணத்தின் நிறைவு நிகழ்வான, லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான பணிகள் நாளை மறுநாள் (23-ந் தேதி) மாலை 5.45 மணிக்கு மேற்கொள்ளப்பட இருந்தது. அதாவது, எதிர்விசை நடைமுறையை பயன்படுத்தி லேண்டர் கருவியின் வேகத்தை படிப்படியாக குறைத்து, இறுதியாக பூஜ்ஜிய நிலைக்கு கொண்டுவந்து, மெதுவாக நிலவில் தரையிறக்கப்பட இருக்கிறது.

'சந்திரயான்-2' விண்கலம் இந்த இடத்தில்தான் தோல்வி அடைந்தது என்பதால், இந்த முறை இஸ்ரோ விஞ்ஞானிகள், லேண்டர் கருவி நிலவில் தடம் பதிக்கச் செல்லும் ஒவ்வொரு நொடியையும் மிகவும் எச்சரிக்கையுடன் கண்காணித்து வருகின்றனர்.

19 நிமிடங்கள் தாமதம்

இம்முறை லேண்டரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதால், வெற்றிகரமாக நிலவில் தடம் பதிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர். லேண்டர் தரையிறங்கிய 2 மணி நேரத்தில், அதிலுள்ள ரோவர் வாகனம் சாய்வுதளம் வழியாக நிலவில் இறங்கி தனது ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று திடீரென லேண்டரை நிலவில் தரையிறக்குவதற்கான நேரத்தில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, 23-ந் தேதி மாலை 5.45 மணிக்கு பதிலாக 19 நிமிடங்கள் தாமதமாக, மாலை 6.04 மணிக்கு தரையிறக்கப்பட இருக்கிறது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாலை 6.04-க்கு தரையிறங்கும்

லேண்டர் கருவி நல்லநிலையில் சீரான இயக்கத்தில் உள்ளது. லேண்டர் தனது உட்புற சோதனைகளைச் செய்து கொண்டு, தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காக காத்திருக்கிறது. அனைத்து செயல்பாடுகளையும் முடித்து லேண்டர் கருவி நிலவின் தென்துருவத்தில் ஆகஸ்டு 23-ந் தேதி மாலை 6.04 மணிக்கு தரையிறங்க இருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்