மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை - அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு

மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அசோக் நகர் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சித்ரகலா பேட்டியளித்துள்ளார்.

Update: 2024-09-07 11:33 GMT

சென்னை,

சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகா விஷ்ணு என்பவர் பாவ - புண்ணியம், மறுபிறவி என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். மேலும் முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள் என பேசிய மகா விஷ்ணுவின் பேச்சை பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து ஆசிரியரை மகா விஷ்ணு மரியாதை குறைவாக பேசியுள்ளார்.

மகா விஷ்ணு பேசிய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பிற்போக்குத்தனமான கருத்துக்களை கூறிய மகாவிஷ்ணுவை நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளி ஆசிரியர் குறித்து அவதூறாக பேசியதாக மகா விஷ்ணு மீது போலீசில் புகாரளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகா விஷ்ணுவை சைதாப்பேட்டை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரகலா பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது;

மகாவிஷ்ணு நிகழ்ச்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த மாதிரியான நிகழ்ச்சி நடத்தப்படுவதாக பள்ளி நிர்வாகம் எங்களுக்கு தெரிவிக்கவில்லை. நாங்கள் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யவில்லை. மகாவிஷ்ணுவை நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மூட நம்பிக்கை தொடர்பான எந்த நிகழ்ச்சிகளும் பள்ளிகளில் நடைபெறக்கூடாது என்பதே எங்களின் நோக்கம். இந்த விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க உள்ளோம்." என்றார்.  

Tags:    

மேலும் செய்திகள்