பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்குவது எப்போது?

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் இருந்து கடந்த 1995-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ந் தேதி பிரிந்து பெரம்பலூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

Update: 2023-08-20 18:30 GMT

கல்வி-வேலை வாய்ப்பு

தமிழ்நாட்டில் சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மக்காச்சோளம், பருத்தி அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. பால் உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் தன்னிறைவு பெற்று திகழ்கிறது. கடந்த 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பெரம்பலூர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 5 லட்சத்து 65 ஆயிரத்து 223 ஆகும். தற்போது அதைவிட மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்து உள்ளது. மாவட்ட தலைநகரான பெரம்பலூரில் தற்போது 2 தனியார் மருத்துவக்கல்லூரிகள், பள்ளிகள், கல்லூரிகள் என கல்வி நிறுவனங்கள் அதிகமாக உள்ளன. பிற மாவட்ட மக்களுக்கு கல்வி அளிப்பதில் பெரம்பலூர் பெரும்பங்கு வகித்து வருகிறது.

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் தனியார் டயர் தொழிற்சாலை ஒன்று உள்ளது. கனிம வளங்கள் நிறைந்த மாவட்டமாக பெரம்பலூர் உள்ளதால் குவாரிகள், புளுமெட்டல் தொழில்களுக்கும் பெயர் பெற்றதாக விளங்குகிறது. வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் பெரம்பலூர் அரசு சர்க்கரை ஆலை உள்ளது. மேலும் 2 தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதத்தில் தொடங்கி வைத்துள்ளார். இந்த பூங்காவில் தொடங்கப்படவுள்ள தொழில் நிறுவனங்களால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் என்று நம்பப்படுகிறது.

ரெயில் போக்குவரத்து வசதி இல்லாத மாவட்டம்

இந்த நிலையில் பெரம்பலூரில் தொழில்கள் தொடர்பாகவும், வேலை வாய்ப்புக்காகவும் வடமாநில மக்கள் குடியேறுவது அதிகரித்து வருகிறது. மேலும் தமிழகத்தின் மையப்பகுதியில் பெரம்பலூர் மாவட்டம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே ரெயில் நிலையம் இல்லாத ஒரு சில மாவட்டங்களில் பெரம்பலூர் மாவட்டமும் ஒன்றாகும். பெரம்பலூர் மாவட்ட மக்கள் ரெயில் போக்குவரத்து வசதியை பயன்படுத்த பெரம்பலூர் அருகே உள்ள அரியலூர் அல்லது திருச்சிக்கு தான் செல்ல வேண்டும்.

இதனால் பெரம்பலூர் மாவட்ட மக்களுக்கு ரெயில் போக்குவரத்து வசதி என்பது கனவாகவே இருந்து வருகிறது. இம்மாவட்ட மக்கள் 75 ஆண்டு காலமாக ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மத்திய-மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கோரிக்கை விடுத்த எம்.பி.க்கள்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் மத்திய மந்திரியும், தற்போதைய நீலகிரி தொகுதி எம்.பி.யுமான ஆ.ராசா முயற்சியினால் கும்பகோணத்தில் இருந்து ஜெயங்கொண்டம், அரியலூர்-பெரம்பலூர் வழியாக ஆத்தூருக்கு ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் பொருட்டு சர்வே நடத்தப்பட்டது. ஆனால் அதற்கு சாத்தியமில்லை எனக்கூறி அத்திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டுமென பெரம்பலூர் தொகுதி எம்.பி.யாக மருதராஜா இருந்த போது கடந்த 2018-ம் ஆண்டு அரியலூரிலிருந்து பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக நாமக்கல் வரையிலான ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். ஆனால் சர்வே முடிவுகள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.

இந்த கோரிக்கை பரிசீலனை செய்த மத்திய அரசு அரியலூரிலிருந்து பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக நாமக்கல்லை இணைக்கும் வகையில் 108 கி.மீ. தூரம் ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில் முதற்கட்டமாக சர்வே நடத்த அப்போதைய மத்திய ரெயில்வே போக்குவரத்து துறை இயக்குனரகம் ரெயில் போக்குவரத்திற்கு சர்வே நடத்திட உத்தரவிட்டது. அதற்காக ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படவில்லை. தற்போது பெரம்பலூர் தொகுதி எம்.பி.யாக உள்ள பாரிவேந்தர் பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு திட்டமான ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டுமென்று என்ற கோரிக்கையை நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசி வந்தார்.

ரெயில்வே அமைச்சகத்தில் இருந்து கடிதம்

மேலும் அவர் இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தி வந்தார். அவர் அரியலூரில் இருந்து பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல்லுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கக்கோரி இந்திய அரசின் ரெயில்வே அமைச்சகத்தின் ரெயில்வே வாரியத்திற்கும் ஏற்கனவே ஒரு கடிதம் அனுப்பி இருந்தார். அதில், சுதந்திர இந்தியாவில் ரெயில் பாதை இல்லாத தொகுதியாக பெரம்பலூர் பகுதி விளங்குகிறது. எனவே புதிய ரெயில் பாதை அமைத்து தருகிற பட்சத்தில் இந்த பகுதியில் விவசாயிகள் மற்றும் அந்த பகுதியின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும், என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஜூலை 3-ந்தேதி இந்திய அரசின் ரெயில்வே அமைச்சகத்தின் ரெயில்வே வாரியத்தின் கூடுதல் உறுப்பினர் சதீஷ் குமார் பாண்டேவிடம் இருந்து பாரிவேந்தர் எம்.பி.க்கு ஒரு கடிதம் வந்தது. அதில், அரியலூருக்கும், நாமக்கல்லுக்கும் இடையே பெரம்பலூர், துறையூர், தாத்தையங்கார் பேட்டை வழியாக 116.26 கிலோ மீட்டர் புதிய ரெயில் பாதைக்கான இறுதி கட்ட ஆய்வு கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும் ஆய்வு பணிகள் முடிந்து, அதன் முடிவுகள் உறுதியான பிறகு திட்டம் செயல்படுத்தப்படுவது பற்றிய முடிவு சாத்தியமாகும், என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட மக்கள் கூறிய கருத்துகள் விவரம் வருமாறு:-

வளர்ச்சி அடையும்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில கூடுதல் செயலாளரும், பெரம்பலூர் மாவட்ட தலைவருமான சண்முகநாதன்:-

அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டால் பெரம்பலூர் மாவட்டம் இன்னும் வளர்ச்சி அடையும். ரெயில் போக்குவரத்தினால் வணிகர்களுக்கு தேவையான பொருட்கள் இந்தியாவில் இருந்து எங்கிருந்தும் பெரம்பலூருக்கு வர முடியும். வணிகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மாவட்டத்தில் உள்ள புளுமெட்டல், ஜிப்சம் உள்ளிட்ட கனிமவளங்களையும், உற்பத்தி பொருட்களையும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு எளிதாக கொண்டு செல்லலாம். பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து அமைக்கும் திட்டத்தை கிடப்பில் போடாமல் விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகள் பயன்பெறுவார்கள்

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் ராஜா சிதம்பரம்:-

பெரம்பலூருக்கு ரெயில் போக்குவரத்து சேவை கொண்டு வரப்படுகிறது என்று அறிவிப்பு வந்தால் பொதுமக்களுக்கு நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது என்று நினைவுக்கு வருகிறது. நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரெயில் போக்குவரத்து வசதி கொண்டு வரப்படும் என்று அரசியல் கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் வெற்றி பெற்ற பிறகு பெரம்பலூர் மாவட்டத்திற்கு ரெயில் போக்குவரத்து திட்டம் கிடப்பில் போடப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்திலும் அறிவிப்பாக இல்லாமல் ஆட்சிக்காலத்தில் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்தால் தான் நம்பலாம். இதனை பொதுமக்கள் நம்ப வேண்டும் என்றால் இந்த அறிவிப்பை காலம் தாழ்த்தாமல் விரைந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். பெரம்பலூருக்கு ரெயில் போக்குவரத்து வந்தால் விவசாயிகள் மிகவும் பயனுள்ளதாக அமையும். மாவட்டத்தில் அதிகம் விளையும் சின்ன வெங்காயம், பருத்தி, மக்காச்சோளம், பூக்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் சந்தைப்படுத்த விவசாயிகளுக்கு இந்த ரெயில் போக்குவரத்து உதவும். பெரம்பலூர் வழியாக ரெயில்வே போக்குவரத்து அமைக்கும் திட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி, நிதி ஒதுக்கி திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த தீவிரப்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகள் வரும்

கொட்டரையை சேர்ந்த கல்லூரி மாணவர் கனகராஜ்:-

பெரம்பலூா் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் வெளி மாவட்டங்களிலும், வெளி மாநிலங்களிலும் வேலை பார்த்து வருகின்றனர். இதேபோல் மாணவர்களும் வெளியூர்களில் படித்து வருகின்றனர். வெளியூர்களை சேர்ந்த மாணவர்களும் பெரம்பலூர் வந்து படிக்கிறார்கள். ரெயில் போக்குவரத்து இருந்தால் அவர்கள் வந்து செல்ல வசதியாக இருக்கும். மாவட்டத்தில் தற்போது தனியார் டயர் தொழிற்சாலை மட்டும் உள்ளது. ரெயில் போக்குவரத்து இருந்தால் நிறைய அரசு, தனியார் தொழிற்சாலைகள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரும். இதனால் பின் தங்கிய மாவட்டமான பெரம்பலூர் முன்னேற வாய்ப்பு உள்ளது. ரெயில் போக்குவரத்து அமைக்கும் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பக்தர்கள்-சுற்றுலா பயணிகள்

பெரம்பலூரை சேர்ந்த இல்லத்தரசி கவிதா:-

பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில், செட்டிகுளம் தண்டாயுதபாணி, ஏகாம்பரேசுவரர் கோவில், துறையூரில் பெருமாள் மலை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவில்கள் உள்ளன. இந்த கோவில்களுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்டால் பக்தர்களுக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் சாத்தனூர் கல் மர பூங்கா, வரலாற்று சிறப்பு மிக்க ரஞ்சன்குடி கோட்டை உள்ளிட்ட சுற்றுலா தலங்களும் உள்ளன. தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வாலிகண்டபுரத்தில் வாலீஸ்வரர் கோவில், சு.ஆடுதுறையில் குற்றம் பொறுத்த அபராதரட்சகர் கோவில் உள்ளிட்டவை உள்ளன. ரெயில் போக்குவரத்து இருந்தால் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல வசதியாக இருக்கும். சிறுவர் முதல் பெரியவர் வரை குடும்பத்துடன் பயணம் செய்திட ரெயில் பயணம் மகிழ்ச்சியை தரும் என்பதால், பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து விரைந்து தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மாவட்டத்தில் ஒரே ரெயில் நிலையம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ரெயில் போக்குவரத்து பெரிதும் கிடையாது. மாவட்டத்திலேயே சில்லக்குடியில் கிராமத்தில் மட்டும் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு சில பயணிகள் ரெயில் தான் நின்று செல்லும். சில்லக்குடி ரெயில் நிலையத்துக்கு முன்பாக திருச்சி மாவட்டம், கல்லகத்திலும் ரெயில் நிலையமும், அடுத்ததாக அரியலூரில் ரெயில் நிலையமும் உள்ளன.

பள்ளி சுவரில் ரெயில்

பெரம்பலூர் மாவட்ட மக்களில் பலர் இன்னும் ரெயில் ஓடுவதை பார்த்ததில்லை. இதனால் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் அரசு உதவி பெறும் மானிய தொடக்கப்பள்ளியின் கட்டிட சுவருக்கு ரெயிலை போன்று வர்ணம் தீட்டப்பட்டுள்ளது.

ரூ.1,400 கோடியில் ரெயில் போக்குவரத்து

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவன தலைவரும், பெரம்பலூர் தொகுதியின் எம்.பி.யுமான பாரிவேந்தர் கடந்த மாதம் 22-ந்தேதி பெரம்பலூரில் நடந்த தொகுதி சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பேசுகையில், பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களின் நீண்ட நாள் கனவு திட்டமான ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தக்கோரி பிரதமர், நிதித்துறை மந்திரி, ரெயில்வே மந்திரியை நான் தொடர்ந்து சந்தித்து கோரிக்கை விடுத்தேன். அதன்பேரில் அரியலூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு 116.26 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.1,400 கோடியில் ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்று ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார், என்றார்.

அரசிடம் திட்டம் உள்ளது

கடந்த மாதம் சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறுகையில், பெரம்பலூர் மாவட்டத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளது, என்றார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் ரெயில் சேவை கொண்டு வர செயற்கைகோள் புகைப்படங்களின் மூலம் முதற்கட்ட ஆய்வுகள் தொடங்கியுள்ளன என்றும், புதிதாக அமைக்கப்படும் வழித்தடங்கள் பசுமை வழித்தடங்களாக இருக்கும் என்றும், பெரம்பலூருக்கு ரெயில்வே திட்டம் வந்தால் அது திருச்சி ரெயில்வே கோட்டத்தின் எல்லைக்குள் தான் இருக்கும் என்றும் ஏற்கனவே தெற்கு ரெயில்வே பொது மேலாளர்ஆர்.என்.சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்